
சென்னை: தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை சார்பில், மாநில அளவிலான தபால்தலை சேகரிப்பு கண்காட்சி சென்னையில் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை சார்பில், மாநில அளவிலான தபால்தலை சேகரிப்பு கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான 14-வது மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி (தநாபெக்ஸ்-2025) சென்னையில் இன்று (29-ம் தேதி) தொடங்குகிறது. வரும் சனிக்கிழமை (பிப்.1-ம் தேதி) வரை 4 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை தமிழக அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் தொடங்கி வைக்கிறார்.
இக்கண்காட்சியில், புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்கு, கிழக்கிந்திய தோல், பிரம்பு கைவினைப் பொருட்கள் ஆகியவற்றின் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்படுகிறது.
அத்துடன், ‘தமிழ்நாடு 1960’ என்ற பெயரில் நடிகர் சிவக்குமார் வரைந்த படங்களின் அஞ்சல் அட்டை ஆல்பமும் வெளியிடப்படுகிறது.
மேலும், இக்கண்காட்சியில் அஞ்சல் அட்டை கையெழுத்து, வரலாறு, பாரம்பரியம் மற்றும் நினைவுச் சின்னங்கள், ராம்சார் தளங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகள் ஆகியவை குறித்து சிறப்பு கருத்தரங்குகள் நடைபெறுகிறது. சென்னை, ஷெனாய் நகர் அம்மா அரங்கில் இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கு தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெறும் என தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் தெரிவித்துள்ளார்.