
ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள கல்லட்டி பள்ளத்தாக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இந்தியாவில் காஷ்மீரை அடுத்து அனைவரையும் ஈர்த்த சுற்றுலா தலம் நீலகிரி. இதனால் ஏழைகளின் காஷ்மீர் என ஊட்டி அழைக்கப்படுகிறது.
காஷ்மீரில் தீவிர வாதம் தலைதூக்கியதால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. குறிப்பாக கோடை காலத்தில் தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலத்தவரும், இரண்டாம் சீசனான செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேனிலவு ஜோடிகள் மற்றும் வெளிநாட்டினரும் அதிகம் பேர் வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் சுற்றுலா தலங்களை பார்த்து சலித்த சுற்றுலா பயணிகளுக்கு தற்போது சூழல் சுற்றுலா மாற்றாக உள்ளது. ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா சிகரம், பைக்காரா ஏரி, அவலாஞ்சி, அப்பர் பவானி உட்பட்ட சுற்றுலா தலங்கள் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு சூழல் சுற்றுலா மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஊட்டியை அடுத்துள்ள அதிகம் பேர் அறியாத கல்லட்டி வனப்பகுதியை கழுகு பார்வையில் ரசிக்கும் வகையில் தட்டனேரி பகுதியில் காட்சி முனை அமைத்துள்ளது. இந்த காட்சி முனைக்கு தற்போது சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். ஊட்டி மட்டுமின்றி மசினகுடி பகுதியில் தங்கும் சுற்றுலா பயணிகள், ஜீப்புகள் மூலம் இப்பகுதிக்கு வந்து இயற்கை அழகை கண்டு ரசித்து செல்கின்றனர்.
கல்லட்டி வனப்பகுதி அடர் வனமாகும். இந்த பள்ளத்தாக்கில் காலையில் சூரிய உதயம் காண்பதும், மேகங்களை காண்பதும் பரவசமானது. இந்த பள்ளத்தாக்கில் புலி, யானை, காட்டு மாடுகள், மான்கள், சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளை காணலாம். அதிர்ஷ்டம் இருக்கும் பட்சத்தில் பகல் நேரங்களிலேயே வனத்தில் நடமாடும் விலங்கினங்களை காணலாம்.
இதற்காக இயற்கை ஆர்வலர்கள் பைனாகுலர்களுடன் இப்பகுதியில் தஞ்சமடைகின்றனர். தற்போது, இந்த காட்சிமுனை திருமண தம்பதி போட்டோஷூட் தலமாகவும் மாறியுள்ளது. இந்த காட்சிமுனை செங்குத்தான பகுதியில் உள்ளது. ஆபத்தை அறியாத சுற்றுலா பயணிகள் பாறைகளின் ஓரத்துக்கு சென்று அமர்வதும், போட்டோ எடுக்கவும் செய்கின்றனர். இதனால், அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்கி்ன்றனர் கல்லட்டி பகுதி மக்கள்.