
கொடைக்கானல்: கொடைக்கானலில் ‘மேஜிக் மஷ்ரூம்’ எனப்படும் போதை காளான் கிடைப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ‘மலைகளின் இளவரசி என்றழைக் கப்படும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இயற்கை அழகை ரசிப்பதற்கென ஒரு கூட்டம் என்றால், கொடைக்கானல் வனப் பகுதியில் இயற்கையாக விளையும் ‘மேஜிக் மஸ்ரூம்’ எனப்படும் போதை காளானுக்காக வரும் கூட்டமே தனி. அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து, சிலர் போதை காளான் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்று வருகின்றனர். இதனால் கொடைக்கானல் தனது அடையாளத்தையும், பெருமை யையும் மெல்ல மெல்ல இழந்து வரு கிறது. போதைக் கும்பல்கள், அடர் வனப்பகுதியில் வளரும் இந்த காளான் களை பறித்து வந்து காளானின் எண்ணிக்கைக்கு ஏற்ப விலை நிர்ணயித்து விற்கின்றனர்.
சுற்றுலா வரும் இளைஞர்கள் போதை காளானை முட்டையுடன் சேர்த்து ஆம்லேட்டாகவும், சாக்லெட் மற்றும் தேனுடன் கலந்தும் உட்கொள் கின்றனர். அந்த காளானில் உள்ள வேதிப்பொருள் உட்கொள்பவர்களை மயக்க நிலைக்கு கொண்டு செல்கிறது. இதற்காகவே, அதனை வாங்கி உட்கொள்ள நினைக்கும் இளை ஞர்கள், போதைக் கும்பலிடம் சிக்கி சில நேரங்களில் பணத்தையும் பறிகொடுக்கின்றனர்.
சிலர் பணம் பறிக்கும் நோக்கில், சாதாரண காளானை காய வைத்து, சிறு சிறு துண்டுகளாக்கி போதை காளான் என்றும் விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க, மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருந்தும், போதை காளான் புழக்கத்தை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இளைஞர்கள் சிலர் போதை காளானை பறித்து, தேனுடன் கலந்து சாப்பிடுவது போன்ற விடியோ சமூக வலைதளதங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விடியோ கொடைக்கானல் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்களை சீரழிக்கும் இதுபோன்ற நிகழ்வுகளால் சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கும் கொடைக்கானல், மெல்ல மெல்ல போதை நகரமாக மாறி விடுமோ என்ற கவலையில் உறைந்து போய் இருக்கின்றனர் கொடைக்கானல் மக்கள்.
இதுகுறித்து கொடைக்கானல் மக்கள் கூறியதாவது: கொடைக்கானல் அழகை ரசிக்க வந்த காலம் மாறி, போதை காளான் போன்ற போதை பொருளை தேடி வரும் நிலை உருவாகியுள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வரும் கொடைக்கானலில் போதைப் பொருள் புழக்கத்தை அறவே ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, போதை காளான் எனக்கூறி சுற்றுலா பயணிகளிடம் பணம் பறிக்கும் கும்பலை கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும், இளைஞர்களை போதையின் பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் கொடைக்கானலில் போதை காளான் கிடைப்பதாக சமூக வலைதளங்களில் விடியோ பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் குறித்து சுற்றுலா பயணிகளிடம் போலீஸார் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினர்.
கொடைக்கானல் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் கூறியதாவது: சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வோரை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைத்துள்ளோம். அதே போல், போதை காளான் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறோம். நேற்று பூம்பாறை அருகே போதை காளான் விற்பனை செய்த கல்லுக்குழிப் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (45) என்பவரை கைது செய்து, 5 கிராம் போதை காளானை பறி முதல் செய்துள்ளோம் என்று கூறினார்.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் லாவண்யா கூறும் போது, போதைப்பொருட்கள் பயன் படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கொடைக்கானல் மலைக்கிராம மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கொடைக்கானலை போதை பொருட்கள் இல்லாத சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம், என்றார்.