புதுடெல்லி: நாட்டில் தற்போது ஆன்மிக சுற்றுலா பிரபலமாகி வருகிறது. அயோத்தி, வாராணசி, திருப்பதி, திருச்செந்தூர் போன்ற புண்ணியத் தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். நமது நாட்டில் உள்ள புண்ணியத் தலங்களுக்கு ஆண்டுதோறும் சென்று கடவுள்களை வணங்கி வருவதை இந்துக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக புண்ணியத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்வது அதிகரித்துள்ளது. மதச்சுற்றுலா என்ற பெயரில் பொதுமக்கள் அதிக அளவில் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருகின்றனர் என்பது புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
நாட்டில் உள்ள பிரபல சுற்றுலா வழிகாட்டி நிறுவனமான மேக் மை டிரிப் நிறுவனம் கொடுத்துள்ள தகவல்களின்படி 2024-25-ம் ஆண்டில் வாராணசி, அயோத்தி, திருப்பதி, திருச்செந்தூர் உள்ளிட்ட 56 புண்ணியத் தலங்களுக்கு சென்று வர பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டியுள்ளனர். கடந்த 2023-24-ம் ஆண்டைக் காட்டிலும் இது 19 சதவீதம் அதிகமாகும்.
மேலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 15 புண்ணியத் தலங்களுக்குச் சென்று அவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இது 25 சதவீத வளர்ச்சியாக உள்ளது. அங்குள்ள ஓட்டல்கள் போன்றவற்றை முன்பதிவு செய்வதில் அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதேபோல ஒரு குழுவாக சுற்றுலா சென்று வருவதும் அதிகரித்துள்ளது. குடும்பம், நண்பர்கள் குழு அல்லது கம்யூனிட்டி குழு என்ற பெயரில் குழுக்களாக பொது மக்கள் மதச் சுற்றுலாவுக்குச் செல்வதும் அதிகரித்துள்ளது.
முன்பதிவு செய்யப்படும் சுற்றுலாக்களில் 47 சதவீதம் பேர் குழுக்களாகச் சென்று வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல் ஓட்டலில் ஒருநாள் வாடகை ரூ.7 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளவற்றை பொதுமக்கள் முன்பதிவு செய்வது 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேக் மை டிரிப் நிறுவனத்தின் இணை நிறுவனரும், குழு தலைமைச் செயல் அதிகாரியுமான ராஜேஷ் மேகவ் கூறும்போது, “நமது நாட்டில் புனிதப் பயணம் எப்போதுமே கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது இந்தியா முழுவதும் புனிதப் பயணம் செல்வோர் அதிகரித்து வருவதை நாம் காண முடிகிறது.
இவ்வாறு புனிதப் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதுமைகளை உருவாக்கவும் நாம் முற்படுகிறோம்’’ என்றார். அயோத்தி, வாராணசி, திருப்பதி போன்ற புண்ணியத் தலங்கள் மட்டுமல்லாமல் பிரயாக்ராஜ், புரி, அமிர்தசரஸ், கதுஷியாம் ஜி, ஓம்காரேஸ்வர், திருச்செந்தூர் உள்ளிட்ட புண்ணியத் தலங்களுக்கு செல்லும் பக்தர்களும் அதிகரித்து வருகின்றனர்.






