
ஊட்டி: “ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 5 நாட்கள் நடைபெறும் 127-வது மலர்கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது,” என மாவட்ட மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்தார்.
ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில், பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு ஆண்டுதோறும் செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட வட்டார போக்குவரத்துத்துறை சார்பில், இந்த ஆண்டுக்கான ஆய்வு இன்று (மே 7) நடைபெற்றது. இதையொட்டி தனியார் பள்ளி வாகனங்கள் அங்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டன. 171 பள்ளி வாகனங்கள் இந்த ஆய்வில் இடம்பெற்றிருந்தன.
இந்த வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, போக்குவரத்து அலுவலர் (பொ) ரவி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது முதலுதவி பெட்டியில் மருந்துகள் சரியாக உள்ளதா, காலாவதியான மருந்துகள் இருக்கிறதா, அவசரகால வழி திறந்து மூடும் வசதி சரியாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா கூறியதாவது: “நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 5 நாட்கள் நடைபெறும் 127வது மலர்கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையிலும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
12 மீட்டர் நீளத்துக்கு அதிகமான சாஸிஸ் உள்ள சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் நீலகிரி மாவட்டத்துக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாலையோரங்களில் சமையல் செய்யக் கூடாது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ளதால், யாரும் பிளாஸ்டிக் கொண்டு வரக்கூடாது.
பிளாஸ்டிக் கொண்டு வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இது குறித்து சோதனைச் சாவடிகளில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் இருப்பதால் இரவு நேரங்களில் வாகனங்களில் யாரும் படுத்து உறங்க கூடாது.” என்று அவர் கூறினார்.