
Last Updated:
Yelagiri Bear | ஏலகிரி மலையில் கரடிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலையின் 12-வது வளைவில், இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் மீது கரடி சீறி பாய்ந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (65), தேங்காய் மற்றும் வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஏலகிரி மலையில் நடைபெற்ற வாரச் சந்தையில் வியாபாரத்தை முடித்து விட்டு, வக்கணம்பட்டி பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஏலகிரி மலையின் 12-வது வளைவில் உள்ள சாலையில், கரடி ஒன்று படுத்தும், மற்றொரு கரடி அதன் அருகே நின்றும் கொண்டிருந்தன. இந்நிலையில், இரு சக்கர வாகனத்தில் வந்த கிருஷ்ணமூர்த்தியை பார்த்த ஒரு கரடி, அவர் மீது சீறிப் பாய்ந்ததாகத் தெரிகிறது. அதில், கிருஷ்ணமூர்த்திக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
அந்த சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், கரடியை விரட்டியுள்ளனர். அதன் பின்னர் 108 ஆம்புலன்ஸ் மற்றும் வக்கணம்பட்டியிலிருந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் மணிகண்டனுக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், 108 ஆம்புலன்ஸ் வர காலதாமதமானதால், விரைந்து வந்த மணிகண்டன் இரு சக்கர வாகனத்திலேயே கிருஷ்ணமூர்த்தியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த வன அலுவலர் அண்ணாமலை மற்றும் தமிழன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஏலகிரி மலையில் கரடியின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கவனமாகவும், பாதுகாப்பாகவும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அது மட்டுமின்றி, விடுமுறை நாட்களில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், ஏலகிரி மலைக்கு வருவதால், கரடிகள் மலைச் சாலையில் வராத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், கரடிகள் நடமாட்டத்தைக் கண்காணித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
July 27, 2025 7:12 AM IST
பைக்கில் சென்றவர் மீது சீறி பாய்ந்த கரடி.. அலறல் சத்தம் கேட்டு கரடியை விரட்டிய மக்கள்.. வனத்துறை கொடுத்த வார்னிங்!
[]
Source link