மதுரை: மதுரையில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க வைகை ஆற்றில் ஓடும் தண்ணீரில் மக்கள் குளித்து மகிழ்கின்றனர்.
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதையொட்டி வைகை அணையில் இருந்து மே 8-ம் முதல் 12-ம் தேதி வரையிலும் தினமும் சுமார் ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 12-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியபோது, மதுரை மாநகர் பகுதி வைகை ஆற்றில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் சென்றது. கள்ளழகர் வைகையில் இறங்கியபோது ஏராளமான பக்தர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆற்று நீரில் நின்றபடி சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதால் சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தை தணிக்கும் விதமாக வைகை ஆற்றில் பொதுமக்கள் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் குளித்து மகிழ்கின்றனர். மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதியில் இருந்து மதுரைக்கு சுற்றுலா வருவோரும் ஏவி.மேம்பாலம், அருகிலுள்ள தடுப்பு அணை , படிக்கட்டுகளில் குளுகுளுவென குளித்து மகிழ்கின்றனர்.
இதன் காரணமாக, வைகையாற்று பகுதியே சுற்றுலா தலம் போல மாற்றி இருக்கிறது. தொடர்ந்து குளிக்க வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் காவல் துறையினரும் அப்பகுதிக்கு ரோந்து சென்று கவனமுடன் குளிக்கவேண்டும் என மைக் மூலம் எச்சரிக்கின்றனர்.






