ரூ.100 டிக்கெட்டில் மொத்த ஊட்டியையும் சுற்றிப் பார்க்க சர்க்யூட் பஸ் திட்டம் அரசு போக்குரவத்து கழகத்தால் செயல்படுத்தப்படுகிறது.
சர்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கோடை விழாக்கள் நடத்தப் படுகிறது. கோடை சீசனில் மட்டும் சுமார் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர், ஒரே சமயத்தில் இவ்வளவு சுற்றுலா பயணிகள் வருவதால் நகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தங்கும் இடங்களில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் திட்டமிட்ட பட்ஜெட்டை விட கூடுதல் செலவாகிறது.
இதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் செலவை குறைக்கும் வகையிலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும் போக்குவரத்து துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சீசன் சமயங்களில் சர்க்யூட் பஸ் எனப்படும் சுற்று பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு தற்போது சுற்று பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையை பொறுத்து சுற்று பேருந்துகளின் எண்ணிக் கை இயக்கப்படுகிறது. தற்போது தனியார் மினி பேருந்துகள் இந்த சுற்று பேருந்து திட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் தற்காலிக மாக இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும் போது, ”கோடை விடுமுறையைக் கொண்டாட ஊட்டி வரும் பயணிகள் வசதிக்காகவும், சுற்றுச்சூழலைக் காக்கவும் சுற்றுப் பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்துகளில் பெரியவர்களுக்கு ரூ.100ம், சிறியவர்களுக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. மத்தியப் பேருந்து நிலையத்தில் தொடங்கி தண்டர்வெர்ல்டு, படகு இல்லம், தாவரவியல் பூங்கா, தொட்ட பெட்டா மலைச் சிகரம், டீ ஃபேக்டரி மற்றும் ரோஜா பூங்கா வழியாக மீண்டும் மத்தியப் பேருந்து நிலையத்தை வந்தடையும்.
காலையில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து செல்பவர்கள் தாவரவியல் பூங்காவைக் கண்டு களித்த பின்னர், அடுத்த பேருந்தில் தொட்ட பெட்டாவுக்குச் செல்லலாம். இந்த பேருந்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை பயணச்சீட்டு வாங்கினால் மட்டுமே போதுமானது. அதனைக் காண்பித்து அந்த நாள் முழுவதும் பிரயாணம் மேற்கொள்ளலாம், கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 25 சுற்று பேருந்துகள் பயன்படுத்தப் பட்டன. தேவைப்பட்டால் அந்த அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படும்’ என்றனர். சுற்று பேருந்து திட்டத்திற்கு சுற்றுலா பயணிகளும், உள்ளூர் வாசிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.






