
காசாவில் பசியில் கதறும் குழந்தைகள் மீது சர்வதேச ஊடகங்களின் கரிசனம் இருக்க, ஊடகப் பார்வையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகப் பார்வையையும் இஸ்ரேலின் பக்கம் திருப்பும் விதமாக, ஒரு வரலாற்று முடிவை நோக்கி முன்னேறி வருகிறார் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
இதுவரை போரில் தரைமட்டமாக்கியதெல்லாம் போதும், இனி முழுமையாக காசாவை கைப்பற்றிவிடலாம் என்பதை நோக்கி அவர் நகர்ந்து வருவதை உறுதிப்படுத்தும் விதமாகவே, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தைக் கூட்டி இது தொடர்பாக அவர் விவாதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவாதம் இந்திய நேரப்படி ஆக.8-ம் தேதி (இன்று) இரவு 8.30 மணிக்கு நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘உங்கள் இலக்கு ஆயுதம் ஏந்தியவர்கள் தானே; அப்பாவி பொதுமக்களை ஏன் பட்டினியில் தள்ளுகிறீர்கள்?!’ என்று உணவு, நிவாரணப் பொருட்களைத் தடுக்கும் இஸ்ரேலை மனிதம் உள்ள மனிதர்கள் கேள்வி கேட்கும் சூழலில், ‘காசாவில் பஞ்சமும், பட்டினியும் தலைவிரித்தாடப் போகிறது’ என்று ஐ.நா. அமைப்புகள் எச்சரிக்கும் வேளையில், காசாவை முழுமையாக கைப்பற்றுவது தொடர்பான விவாதத்தை முடுக்கிவிட்டிருக்கிறார் நெதன்யாகு.
தயங்கும் ராணுவம்! – முன்னதாக நேற்று காசாவின் வடக்குப் பகுதி மற்றும் தெற்கில் உள்ள கான் யூனிஸ் நகரங்களை விட்டு மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. இந்நிலையில், இன்று முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது. ஆனால், பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்த முடிவில் இஸ்ரேல் ராணுவமே முழுமையாக உடன்படவில்லை என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன.
அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “போரின் அனைத்து இலக்குகளும் எட்டப்படும் வரை ராணுவம், அரசின் முடிவுகளுக்கு உடன்பட வேண்டியது ராணுவத்தின் கடமை” என்று தெரிவித்திருந்தார். அவருடைய பேச்சை சுட்டிக்காட்டி, அரசு உத்தரவை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற தொனியில், காட்ஸ் புலம்பியிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக முயற்சிப்பதாக கூறி வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம், காசாவை இஸ்ரேல் முழுமையாகக் கைப்பற்றுவதை ஆதரிப்பீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட, அது முழுக்க முழுக்க இஸ்ரேலை சார்ந்தது” என்று பட்டும் படாமலும் சொல்லியிருக்கிறார்.
உண்மையைச் சொல்வதென்றால், போரை நிறுத்துவேன் என்று முழுங்கும் ட்ரம்ப், இதுவரை வெளிப்படையாக இஸ்ரேலுக்கு எவ்வித அழுத்தமும், நெருக்கடியும் கொடுக்கவில்லை என்பதே நிதர்சனம் என்கின்றனர் நிபுணர்கள்.
முழுமையாகக் கைப்பற்றுதல் என்றால் என்ன? – சரி, காசாவை ழுமையாகக் கைப்பற்றுதல் அல்லது ஆக்கிரமித்தல் என்றால் என்ன என்று சற்று தெளிவாகப் பார்ப்போம். அக்டோபர் 7, 2023 அன்று பாலஸ்தீன விடுதலை ஆதரவு இயக்கமான ஹமாஸ் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், 1200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து, காசா மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது.
இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் காசாவைச் சேர்ந்த 61 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இன்று கூட இஸ்ரேல் அங்கே தாக்குதலை நடத்தியுள்ளது. காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் இன்றைக்கு 20-ஐ அதிகரித்துக் கொள்ளலாம், என்றளவில் அன்றாடம் உயிரிழப்புகள் ஓயவில்லை.
இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் ராணுவத் தாக்குதலால் பாதிக்கப்படாமல் எஞ்சியுள்ளது அப்பகுதியின் 25% மட்டுமே. அங்குதான் போரில் உயிர் பிழைத்த மிச்சம் மீதி பேர் தஞ்சமடைந்துள்ளனர். எஞ்சியுள்ள இந்தப் பகுதிக்குள் ராணுவப் படைகளை குவித்துவிட்டால், காசாவை இஸ்ரேல் முழுமையாகக் கைப்பற்றியதாகிவிடும்.
ஆதரவும் எதிர்ப்பும்: காசாவில் இஸ்ரேலியர்களை (யூதர்களை) மீள்குடியேற்றம் செய்ய அவர் எத்தனித்தாலும், இஸ்ரேலிய மக்களில் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக அது இல்லை. காசாவில் சிக்கியுள்ள பிணைக் கைதிகள் இன்னும் உயிருடன் இருக்கலாம். அவர்களை மீட்பதைத்தான் பிரதமர் செய்ய வேண்டுமே தவிர ஹமாஸை எரிச்சலூட்டும் இதுபோன்ற நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
ஆனால், இஸ்ரேலிய மக்களில் ஒரு சிலர், காசாவுக்குள் மீள்குடியேற விரும்புகின்றனர். யூத மதம் சார்ந்த நம்பிக்கைகள், அரசியல் நிலைப்பாடுகள் என பல காரணங்களால் உந்தப்பட்ட அவர்கள் நெதன்யாகுவின் முடிவை ஆதரிக்கின்றனர். “மக்கள் ஆதரவு, எதிர்ப்பெல்லாம் இருக்கட்டும். இப்படியான கைப்பற்றுதல்கள் / ஆக்கிரமிப்புகள் இஸ்ரேலுக்கு புதிது அல்ல” என்கின்றனர் நிபுணர்கள்.

அந்த 6 நாள் போர்… – காசாவை முதன்முதலில் இஸ்ரேல் கைப்பற்றியது 1967-ல் என்று வரலாறு கூறுகிறது. இதற்காக சிரியா, ஜோர்டான், எகிப்து மீது இஸ்ரேல் 6 நாட்கள் போர் நடத்தியது. அதனைத் தொடர்ந்து ஜூன் 5, 1967-ல் அப்போதைய இஸ்ரேலிய ராணுவத் தலைவர் இஷாயாகு காவிஷ், காசாவை கைப்பற்றும்படி இஸ்ரேல் ராணுவத்துக்கு உத்தரவிட்டார். அதுவரை அந்தப் பகுதி எகிப்து கட்டுப்பாட்டில் இருந்தது.
ராணுவத் தளதியின் உத்தரவை அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மோஷே டயான் எதிர்த்தார். லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களுடன் சர்ச்சைக்குரிய பகுதியைக் கைப்பற்றுவது, ‘குளவிக் கூட்டுக்குள் சிக்குவது போன்றது’ என்று விமர்சித்திருந்தார். ஆனால், ராணுவம் முன்னேறியது. எகிப்திடமிருந்து காசாவை கைப்பற்றியது. பாலஸ்தீன மக்கள் உள்ள பகுதிகளில் ராணுவ அவுட்போஸ்ட்களை அமைத்து அங்கே யூதர்களை குடியமர்த்தியது. இது பாலஸ்தீன மக்கள் ஒரே இடத்தில் அடர்த்தியாக பலமாக இருப்பதைத் தடுக்கும் உத்தியாக இஸ்ரேல் கையாண்டது.
1970-ல் இஸ்ரேலில் ஆட்சியில் இருந்த தொழிலாளர் கட்சி, அங்கே நஹால் குடியேற்றங்களை அமைத்தது. நஹால் என்பது இஸ்ரேலியப் படைப்பிரிவின் பெயர். அதையொட்டி இஸ்ரேல் காசா ஆக்கிரமிப்புப் பகுதியில் நஹால் குடியேற்றங்களை உருவாக்கியது. அங்கே குடியமர்த்தப்பட்ட மக்கள் விவசாயத்தை பிரதானமான தொழிலாகக் கொண்டிருந்தாலும் கூட ராணுவத் திறன் பெற்றவர்களாகவும் இருந்தனர். 2005 வாக்கில் காசா பகுதியில் இதேபோல் 21 குடியேற்றங்கள் உருவாகின. மொத்தம் 8600 பேர் இருந்தனர். கிட்டத்தட்ட 13 லட்சம் பாலஸ்தீனியர்களுக்கு இடையே இந்த 8100 பேர் ஆங்காங்கே குடியேறியிருந்தனர்.
பாலஸ்தீன அகதிகள் முகாம்கள் நிரம்பி வழிந்து கொண்டிருக்க, அத்தியாவசியத் தேவைகள் கூட பூர்த்தியாகாமல் திணறிக் கொண்டிருக்க, அதன் பார்வையிலேயே இஸ்ரேல் ராணுவ உதவியுடன், பாதுகாப்புடன் இஸ்ரேலின் நஹால் குடியேற்றங்கள் பசுமையாக, வளமாக மாறுவது பாலஸ்தீன மக்களை, போராளிகளை ஆவேசமடையச் செய்தது என்கிறது வரலாற்றுப் புள்ளிவிவரங்கள்.
இந்தப் புகைச்சல் 2000-ல் போராட்டமாக வெடித்தது. இதனால், இஸ்ரேல் தனது குடியேற்றக் கொள்கையை மறு ஆய்வுக்கு உட்படுத்தியது. இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையேயான மோதலைத் தடுக்க குடியேற்றத்தை அப்புறப்படுத்தத் தொடங்கியது.
2005-ல் அப்போதைய பிரதமர் ஏரியல் ஷாரோன், காசா, மேற்குக் கரையின் மேற்கே இருந்த அனைத்து இஸ்ரேலிய குடியேற்றங்களையும் கலைக்க உத்தரவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. யூத மதத் தலைவர்கள், “புனித நிலத்தில் உள்ள குடியேற்றங்களை அழிப்பது ஆன்மிகத் துரோகம்” என்று விமர்சித்தனர்.
இவ்வாறாக பல்வேறு எதிர்ப்புகளால் அழிந்துபோன இஸ்ரேலிய குடியேற்றங்களை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கிறார் பெஞ்சமின் நெதன்யாகு.
யூத குடியிருப்புகளை ஆதரித்து… – காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் முயற்சித்துவரும் வேளையில், அதனை ஆதரித்து ஜூலை 30-ல் ஒரு பிரம்மாண்ட பேரணி ஒன்று அங்கே நடந்துள்ளது. காசாவில் குடியேற்றத்தை ஊக்குவிக்கும் அமைப்புகள் இந்தப் பேரணியை நடத்தியுள்ளன. காசா எல்லை வரை இவர்கள் பேரணியாகச் சென்றுள்ளனர். காசாவின் வடக்கு முனையில் இஸ்ரேலியர்கள் குடியமர்த்தப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இதனை ஒட்டி, காசாவில் யூதர்களை குடியேற்ற வேண்டும் என்று கோரிக்கையை ஆதரித்து 1000 குடும்பங்கள் கையெழுத்திட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் நெதன்யாகு, காசாவை முழுமையாகக் கைப்பற்றுவதற்கு உத்தரவிடுவாரா, இல்லை… பழைய பாணியில் காசாவில் இஸ்ரேலிய யூத குடியேற்றங்களுக்கு அனுமதி வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முந்தைய வரலாற்றுப்படி பார்த்தால் காசாவில் யூத குடியேற்றங்கள் ஊக்குவிக்கப்படும் என்று கணிக்கப்படுகிறது.