
அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயம், ராம்சார் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்த ஆட்சியரின் நிதியில் (சுரங்க நிதி) ரூ.39 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சேதமடைந்த கட்டிடங்கள், தரைத் தளங்கள், பார்வையாளர் கோபுரம், செயற்கை நீரூற்றுகள் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ஏரியை சுற்றிவர புதிய படகு வாங்கப்பட்டுள்ளது.
இதில், 20 பேர் வரை அமர்ந்து சென்று ஏரியின் அழகை ரசிக்கலாம். அதற்காக பணியாளர் ஒருவருக்கு படகு ஓட்டும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஏரியில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் இருக்கும் போது, படகு சவாரி நடைபெறும். மேலும், சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இங்கு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்படும். ஏரிக் கரைகளை பலப்படுத்துதல், மதகுகளை சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், பறவைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல், சுற்றுலா பயணிகளுக்கு சாலை, கழிப்பறை உள்ளிட்ட கூடுதல் வசதிகள் ஏற்படுத்து தல் போன்ற பணிகளுக்கு ரூ.1 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. அந்த நிதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப் படும். மேலும், தொலைவில் உள்ள பறவைகளை பார்க்கும் வகையில் கூடுதலாக தொலை நோக்கி கருவிகள் வாங்கப்பட உள்ளன என்றார்.