
சேலம்: ஏற்காட்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது. 1.50 லட்சம் ரோஜாக்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மலர்ச் சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தன.
சேலம் மாவட்டம் ஏற்காடு அண்ணா பூங்காவில் மலர்க் கண்காட்சியை வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர் செல்வம், வனத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி முன்னிலை வகித்தார். விழாவையொட்டி, கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அண்ணா பூங்காவில் யானை, காட்டெருமை, முயல்,குரங்கு, பாம்பு, மான், புலி போன்ற விலங்குகள், சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை வண்ணங்களைக் கொண்ட 50 ஆயிரம் ரோஜா மலர்களால் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன.
73 ஆயிரம் மலர்களால்… மேலும், 73 ஆயிரம் ரோஜாக் களைக் கொண்டு மேட்டூர் அணையின் 16 கண் மதகு வழியாக நீர் வெளியேறுவது போல அமைக்கப்பட்டுள்ள சிற்பம் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும், 7 ஆயிரம் ரோஜா மலர்களால் ஒற்றைக் கொம்பு குதிரை, திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குப்பை அகற்றும் வாகனம், 6,280 கார்னேஷன் மலர்களால் பிரம்மாண்டமான தர்பூசணி பழச்சிற்பம், பிகாச்சு, சார் மண்டர் போன்ற கார்ட்டூன் உருவங்கள் போன்றவை அமைக்கப் பட்டுள்ளன.
மேலும், பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், வாசனைப் பொருட்களால் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா பூங்கா வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.
இதே போல, அரசு தாவரவியல் பூங்காவில் 5,600 ரோஜா மலர்களால் தேனீ உருவம், இரட்டை இதயம், செல்ஃபி பாயின்ட், சிறகு இதயம் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஏரிப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வண்ண மலர்களால் செல்ஃபி பாயின்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்காடு பூங்காக்கள், படகுத்துறை, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், கரடியூர் போன்ற காட்சிமுனைப் பகுதிகள், சேர்வராயன் கோயில் என ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் அனைத்திலும் கூட்டம், கூட்டமாக சுற்றுலாப் பயணிகளைக் காண முடிந்தது.
சில்லென்ற காற்று, மழை மேகங்கள் சூழ்ந்த வானம் என ஏற்காட்டில் நிலவும் வானிலை, சுற்றுலாப் பயணிகளை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோடை விழா வரும் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு கோடை விழாமலர் கண்காட்சியை 17 லட்சம் பேர் பார்வையிட்ட நிலையில், நடப்பாண்டு கூடுதல் எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பர் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.