
சென்னை: கேரளாவில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களை ‘ஹெலிகாப்டர்’, ‘கடல் விமானம்’ மூலம் பயணிகள் கண்டுக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுற்றுலாத் துறை தகவல் அதிகாரி ஸ்ரீ குமார் தெரிவித்துள்ளார்.
கோடை காலத்தையொட்டி கேரளாவுக்கு சுற்றுலா வரும் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் கேரள சுற்றுலாத் துறையின் சார்பில் அகில இந்திய அளவில் சுற்றுலா பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் கோடைக்கால பள்ளி விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாவுக்கு செல்ல விரும்பும் குடும்பங்களை இலக்காக கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை கேரள அரசு அறிவித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கேரள சுற்றுலாத் துறையின் சார்பில் ‘கேரளாவில் ஒன்று சேருங்கள்’ என்ற சுற்றுலா பிரச்சாரம் சென்னை பரங்கிமலையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் கேரள சுற்றுலாத் துறையின் தகவல் அதிகாரிகள் எஸ்.ஸ்ரீ குமார் மற்றும் பிரதாப் குமார் ஆகியோர் பங்கேற்றனர். செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது: “கேரளாவுக்கு சுற்றுலா வரும் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை கேரள அரசு கொண்டு வந்துள்ளது.
அந்தவகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக ஹெலிகாப்டர் மூலம் சுற்றுலாத் தலங்களை சுற்றிப்பார்க்கும் வகையில் ‘ஹெலி சுற்றுலா’ திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம்படுத்தப்பட்டது. இத்துடன் ‘கடல் விமானம்’ திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டங்களுக்கு சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அதேபோல கேரவன் சுற்றுலாவும் மக்களிடையே பெரும் கவனத்தை பெற்று வருகின்றன. இதையொட்டி மூணார், தேக்கடி, கொச்சி கோட்டை ஆகிய இடங்களில் கேரவன் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய இளைஞர்களிடம் பிரபலமாக இருந்து வரும் ‘டெஸ்டினேஷன் வெட்டிங்’ திருமணங்களுக்கும் கோவளம், கொச்சி கோட்டை, சேராய் கடற்கரை பகுதிகளில் மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, சாகசங்களை விரும்பும் சுற்றுலா பயணிகளுக்காக இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமன் கிராமத்தில் ‘சர்வதேச பாரா கிளைடிங் திருவிழா’ மார்ச் 19 முதல் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. வர்கலா கடற்கரையில் ‘சர்வதேச ஃசர்பிங் திருவிழா’ மார்ச் மாதம் இறுதியில் நடைபெறவுள்ளது. மலைப்பகுதி சைக்கிளிங் சேம்பியன்ஷிப் போட்டியும் வரும் மார்ச் 28 முதல் 30-ம் தேதி வரை வயநாட்டில் நடைபெறுகிறது. சுற்றுலா பயணிகள் இவற்றையெல்லாம் கண்டுகளிக்க வேண்டும்” என்று அவர்கள் கூறினர்.