
Last Updated:
மநீம தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார்.
தவெக தலைவர் விஜய் இனி ஒரு தலைவராக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், எம்பியுமான கமல்ஹாசன் கூறினார்.
தவெக தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக 41 பேர் பலியாகினர். இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
இதில், மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். என். ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் ஆகிய இருவரும் தொடர்ந்து தலைமறைவாக இருந்துவருகின்றனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மநீம தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன் இன்று கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார்.
கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்த கமல்ஹாசன், முதலில் பரப்புரை நடத்த தவெக அனுமதிகேட்ட உழவர் சந்தை, லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியையும் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் தான் நிற்க வேண்டும் என்றார். மேலும், தவெக தலைவர் விஜய் இனி ஒரு தலைவராக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்றார்.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்ற கமல்ஹாசன், அவர்களது குடும்பத்துக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
இதேபோல், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெகவிற்கோ, விஜய்க்கோ அடைக்கலம் கொடுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
October 06, 2025 10:00 PM IST