
Last Updated:
வல்லக்கோட்டை கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்திற்கு அமைச்சர் சேகர் பாபு வருத்தம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு கும்பாபிஷகம் நடைபெற்றது. இந்தக் கோயில், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதிக்குள் வருவதால், அந்தத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பெயரில், கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க செல்வப்பெருந்தகை சென்றார்.
அவர் கோயிலுக்கு சென்ற நிலையில், முதலில் கோயில் மேலே செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிறகு சிறிது நேரம் கழித்து அவர் கோயில் மேலே செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, “வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு அந்தக் கோயில் அதிகாரியின் அழைப்பின் பெயரில் தான் சென்றோம். காலை 8.30 மணிக்கு வரச் சொல்லியிருந்தார். அதன்படி அந்த நேரத்திற்கு அங்குச் சென்றோம். ஆனால், வரவேற்க யாரும் இல்லை. ஃபோன் செய்தாலும் யாரும் எடுக்கவில்லை.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு @SPK_TNCC அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு pic.twitter.com/NLFonw2WSm
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) July 8, 2025
அரை மணி நேரம் காத்திருப்புக்கு பிறகு கோயில் அதிகாரி மேலே சென்றுவிட்டதாகவும், நடை அடைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்கள். விஐபி தரிசனம் இருக்கிறது என்றார்கள். ஆனால், எங்களை எந்தப் பட்டியலில் கோயில் அதிகாரிகள் வைத்திருந்தார்கள் என்பது தெரியவில்லை” என அங்கு நடந்த விவரத்தை விளக்கினார்.
இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பேசு பொருளாக மாறிய நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு இன்று எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை வீட்டிற்கு சென்று அவரிடம் வருத்தம் தெரிவித்தார்.
இது குறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று (08.07.2025) மாலை இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு எனது இல்லத்தில் என்னை சந்தித்தார். நேற்று, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் நல்லாட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, வருத்தம் தெரிவித்தார்.
இன்று (08.07.2025) மாலை மாண்புமிகு இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் எனது இல்லத்தில் என்னை சந்தித்தார்.
நேற்று, திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அண்ணன்… pic.twitter.com/lyZKSMeZPk
— Selvaperunthagai K (@SPK_TNCC) July 8, 2025
நடைபெற்ற சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதிகாரிகள் செய்த தவறுக்கு, அனைத்துத் தரப்பினரையும் சமமாக நடத்தும் முதலமைச்சரின் நற்பெயருக்கும், அறநிலையத் துறை அமைச்சருக்கும் இச்சம்பவம் குறித்து எந்தவித களங்கமும் ஏற்படுத்த வேண்டாம். மேலும், இத்துடன் இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். இது குறித்து வருத்தம் தெரிவித்த ஜனநாயக சக்திகளுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
July 08, 2025 8:08 PM IST
வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கில் அனுமதி மறுப்பு! செல்வப்பெருந்தகையை நேரில் சந்தித்த சேகர் பாபு