
வாஷிங்டன்: இந்தியா மிகவும் அதிக வரி விதிக்கும் நாடு என்றும், அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளின் பொருட்களுக்கு ஏப்ரல் 2-ம் தேதி முதல் பரஸ்பர வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் வர்த்தக வரிகள் குறித்து ட்ரம்ப் குறிப்பிடுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக அவர் இந்தியாவை ‘வரிவிதிப்புகளின் அரசன்’ என்று விமர்சித்திருந்தார்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையை ஆற்றிய ட்ரம்ப் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடனான வரி ஏற்றத்தாழ்வுகளை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது. இதேபோல் மற்ற நாடுகளும் அதிக வரி விதிக்கின்றன. இது நியாயமற்றது. ஆட்டோமொபைல் பொருட்களுக்கு 100 சதவீதத்துக்கும் அதிகமாகவே இந்தியா வரி விதிக்கிறது. ஐரோப்பிய யூனியன், இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, கனடா போன்ற நாடுகள், நாம் விதிக்கும் வரியை விட அதிக வரிகளை விதிக்கின்றன. அதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எனவே, மற்ற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கின்றனவோ, அதே அளவுக்கு அமெரிக்காவும் வரி விதிக்கும்.
அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பது பல ஆண்டுகளாக உள்ளது. இப்போது நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. வர்த்தக கொள்கைகளில் அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் சமமற்ற நிலை உள்ளது. அதை சரி செய்வதற்குதான் பரஸ்பரம் வரி விதிக்கும் முறையை ஏப்.2ம் தேதி முதல் அமல்படுத்த நினைக்கிறேன்.” என்று கூறியிருந்தார்.
ட்ரம்ப் – பிரதமர் மோடி சந்திப்பு: இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், இந்திய பிரதமர் மோடியும் கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை 100 பில்லியன் டாலராக உள்ளது. நீண்ட கால வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதற்கு பேச்சுவார்த்தையைத் தொடங்க இரண்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.