
குமுளி: இடுக்கி மாவட்டத்துக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேக்கடி படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தின் எல்லையில், கேரள பகுதியில் அமைந்துள்ள தேக்கடியில் சுற்றுலா பயணிகளுக்காக படகுகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மேலும், அந்த மாவட்டத்துக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நீர் சார்ந்த விளையாட்டுகள், படகு சவாரி, மலையேற்றம் உள்ளிட்டவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேக்கடியில் படகு சவாரி வரும் 27-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.