திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணமான இரண்டரை மாதங்களில் புதுமணப் பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் வரதட்சணை கேட்டு, உடல் மற்றும் மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக இறப்பதற்கு முன்பு தனது தந்தைக்கு ரிதன்யா ஆடியோ அனுப்பியிருந்தார்.
இந்த வழக்கில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் மூவரின் ஜாமீன் மனுவை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த்து.
இதனையடுத்து, மூவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி, எம்.நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என ரிதன்யா கூறியதாகவும் இரு தரப்பும் பொருளாதாரத்தில் சம அளவில் இருப்பதால் தங்களுக்கு வரதட்சணை தேவையில்லை என தெரிவித்தார்.
மேலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே ரிதன்யா தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் கூறினார்.
ரிதன்யா தந்தை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும், ஜாமீன் வழங்கினால் அவர்கள் சாட்சிக்ளை கலைப்பார்கள் எனவும் கூறினார். நன்கு படித்த பெண்ணான ரிதன்யா தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளதாகவும் மனோதத்துவ ரீதியாக கவின் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, அறிக்கை போதுமான தகவல்களுடன் முழுமையாக இல்லை என அதிருப்தி தெரிவித்தார். மேலும், ரிதன்யா உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்படவில்லையே? ரிதன்யாவின் ஆடியோ பதிவு என்ன ஆனது? அந்த ஆடியோ அவரது போனில் தான் ரெக்கார்ட் செய்யப்பட்டதா? நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், ரிதன்யாவின் போனில் தான் அந்த ஆடியோ ரெக்கார்ட் செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், ரிதன்யா, கவின் இருவரின் செல்போன்களும் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுளதாகவும் அதன் அறிக்கை பத்து நாட்களுக்குள் கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும், சமூக வலைதள கணக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரிதன்யா உடன் படித்தவர்கள், உறவினர்களிடம் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளதாகவும் காவல்துறை தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதனையடுத்து, தடயவியல் அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Chennai,Tamil Nadu
July 31, 2025 2:29 PM IST
[]
Source link






