
ராமேசுவரம்: “ராமேசுவரத்தில் ஹெலிபேட் தளம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பான அறிக்கை கிடைத்தவுடன் ஹெலிகாப்டர் இயக்குவது தொடர்பாக முடிவு செய்யப்படும்,” என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.
தேசிய அளவில் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலம் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ராமேசுவரத்துக்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றலாத்துறை பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ராமேசுவரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் செய்யப்பட்ட பணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு செய்யப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து, மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் நித்யா மற்றும் ராமேசுவரம் வருவாய்த்துறை அலுவலர்களுடன் சுற்றுலா இடங்களை பார்வையிட்டார்.
முன்னதாக, அக்னி தீர்த்த கடற்கரை செல்லும் வழியில் உள்ள வாகன நிறுத்தம், தனுஷ்கோடி செல்லும் வழியில் சுற்றுலாத்துறை சார்பில் ஹெலிபேட் தளம் அமைய உள்ள இடம், தனுஷ்கோடி பழைய தேவாலயம், அரிச்சல் முனை, அரியமான் கடற்கரை, ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் என்ற விடுதி, மண்டபத்தில் உள்ள சுற்றுலாத் துறைக்கு சொந்தமான பயனற்ற நிலையில் உள்ள தங்கும் விடுதி உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறும்போது, “ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகள் என்ன என்பது குறித்து அறிந்து கொள்வதற்காகவும், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரசிடம் முக்கிய திட்டம் உள்ளது.தனுஷ்கோடி செல்லும் வழியில் சுற்றுலாத்துறை சார்பில் ஹெலிபேட் தளம் அமைப்பது தொடர்பாக சாத்தியக்கூறுகளுக்கு அறிக்கை வந்த பின்னர் பணிகள் தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.
மேலும் ராமேசுவரம் தீவு மற்றும் தனுஷ்கோடி கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால் தனுஷ்கோடி பழைய தேவாலயத்தை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பாக கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன், தனுஷ்கோடியில் சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும்,” என்றார்.