
Last Updated:
புதுச்சேரியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திச் சாதனை படைத்தவர் ராமச்சந்திரன்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் வயது முதிர்வால் காலமானார். அவருக்கு வயது 94. எம்.டி.ஆர். ராமச்சந்திரன், 1969-ல் நெட்டபாக்கத்தில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அந்த வெற்றியைத் தொடர்ந்து 1969-74 காலம் வரை திமுக-கம்யூ ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
அதன்பிறகு 1980 முதல் 83 வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, முதலமைச்சராகப் பதவி வகித்தார். தொடர்ந்து 1990 முதல் 91 வரை மீண்டும் திமுக – ஜனதா தள கூட்டணி ஆட்சியில் முதல்வராகப் பதவி வகித்தார்.
பிறகு 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்த ராமச்சந்திரன், 2006-ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
திமுகவில் பயணம் துவங்கி இறுதியாய் காங்கிரஸ் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றிவந்த எம்.டி.ஆர். ராமச்சந்திரன் மறைவு திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த எம்.டி.ஆர். ராமச்சந்திரனுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சரும், புதுவை மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைப்பாளருமாகிய ராமச்சந்திரன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழகத்தின் சார்பில் முதலமைச்சராக இருந்து, புதுச்சேரியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திச் சாதனை படைத்தவர்.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
December 08, 2024 10:26 PM IST
[]
Source link