
வாஷிங்டன்: “ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இனி எரிபொருட்களை வாங்காது என்று கேள்விப்பட்டேன். அது ஒரு நல்ல நடவடிக்கை” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரஷ்யாவிடம் இருந்து இனி இந்தியா எரிபொருள் வாங்காது என்று புரிந்து கொள்கிறேன். அதைத்தான் கேள்விப்பட்டேன். சரியா தவறா என எனக்குத் தெரியாது, ஆனால் அது ஒரு நல்ல நடவடிக்கை. என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.” என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலை நிறுத்துவதில் டொனால்ட் ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கான முயற்சியாக, ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பிற நாடுகளையும் அது எச்சரித்து வருகிறது.
அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எரிபொருட்களை வாங்கி வருகின்றன. சந்தை விலையை விட ரஷ்யா குறைவாக விற்பதால் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது.
இதை தடுக்கும் நோக்கில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் கடந்த புதன் கிழமை அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “இந்தியா எங்கள் நண்பர். எனினும், பல ஆண்டுகளாக நாங்கள் அவர்களுடன் சிறிய அளவிலான வர்த்தகத்தையே மேற்கொண்டு வருகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஏனெனில், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவின் வரி விதிப்பு மிக அதிகமாக உள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இதனால்தான் அவர்களுடனான எங்களது வர்த்தகம் குறைந்த அளவில் உள்ளது. மேலும், எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு. அவர்கள் கடுமையான பணம் சாரா வர்த்தக தடைகளையும் அமல்படுத்துகின்றனர்.
உக்ரைனில் மேற்கொண்டு வரும் கொலைவெறித் தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்பும் நேரத்தில், அந்த நாட்டிடமிருந்து தங்களுக்கு தேவையான ராணுவ உபகரணங்களை அதிக அளவில் இந்தியா வாங்கியுள்ளது. சீனாவுடன் சேர்ந்த ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி இறக்குமதியாளராகவும் இந்தியா உள்ளது. இவை அனைத்தும் சரியான விஷயங்கள் அல்ல.” என தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக ட்ரம்ப் வெளியிட்ட மற்றொரு பதிவில், “ரஷ்யாவுடன் இந்தியா வைத்துள்ள உறவு குறித்து எனக்கு கவலை இல்லை. ஆனால், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிகள்தான் உலகிலேயே மிக அதிகமாக உள்ளது. எனவேதான் அவர்களுடன் ஒப்பீட்டளவில் சிறிய வணிகத்தையே செய்து வருகிறோம். அதேநேரம், ரஷ்யாவுடன் அமெரிக்க வர்த்தக உறவு கொண்டதில்லை. இந்தியா மற்றும் ரஷ்யாவும் செயலிழந்துபோன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்” என்று கடுமையாக கூறியிருந்தார்.
இந்நிலையில், ரஷ்யாவுடன் வர்த்தக உறவில் ஈடுபடும் நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளையும் ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனால், சில இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருட்களை வாங்குவதை நிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. எனினும், இது தொடர்பாக மத்திய அரசு எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை. இந்த பின்னணியில், டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்து, முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.