மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்று சாதிப்பெயரை வைப்பதுதான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம் | தமிழ்நாடு

Spread the love


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

கோவையில் புதிதாக 1791 கோடி ரூபாயில் 10 கி.மீ தூரத்திற்குக் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீண்ட கோவை – அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை வைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

இந்தியாவில் மேம்பாலம் கட்ட சராசரியாக 1 கி.மீ.க்கு 18 கோடி ரூபாய் செலவிட்டுக்கொண்டிருக்கும் பொழுது, அதே 1 கி.மீ.க்கு 170 கோடி ரூபாய் மக்கள் பணத்தில் செலவழித்து கட்டப்பட்டிருக்கும் இப்பாலத்திற்கு இந்த நாட்டின் விடுதலைக்காக வீரத்துடன் போர் புரிந்து இன்னுயிர் ஈந்த

பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே? அவ்வீரத்திருமகன் கழுத்திறுகி கசிந்து வெளியேறிய கடைசி மூச்சுக்காற்று அந்த மண்ணில் தானே உலாவிக்கொண்டு இருக்கிறது? நாங்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்பதற்காகத்தானே பாட்டன் தீரன் சின்னமலை உயிர் நீத்தார். அவர் பாதம் பட்ட மண்ணில் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு அவருடைய பெயரைச்சூட்டி நாங்கள் நடமாடக்கூடாதா?

விடுதலை போராட்டக்களத்தில் தலையில் தடியால் தாக்கப்பட்டு தன்னுயிர் நீத்த பின்பும் விடுதலைக்கொடியை வீழ்ந்துவிடாமல் காத்த பாட்டன் கொடி காத்த குமரன் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?

மாடு கூட இழுக்கத் திணறுகிற செக்கை கோவை கொடுஞ்சிறையில் தாயக விடுதலைக்காக இழுத்து, தன் சொத்தை எல்லாம் இழந்து, இறுதியில் மண்ணெண்ணெய் விற்று மண்ணை விட்டு மறைந்த கப்பலோட்டிய தமிழர் பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?

இந்தி திணிப்பை எதிர்த்து 1938இல் தொடங்கிய முதலாவது மொழிப் போரில் 03.06.1938ஆம் நாள் கைது செய்யப்பட்டு முதலாவது வீரராக சிறைக்களம் புகுந்த மொழிப்போர் மறவர் பல்லடம் பொன்னுசாமி அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?

உலகெங்கும் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கியே நீர் பாயும் என்ற இயல்புக்கு மாறாக, பள்ளத்திலிருந்தும் மேடான பகுதிக்கும் நீர் செல்லும் பாதையை உருவாக்க முடியும் என்பதைத் தம்முடைய நுண்ணறிவால் உணர்ந்து அறிவியல் வளர்ச்சியுறாத காலத்திலேயே பாம்பு வளைந்து நெளிந்து செல்வது போல் கால்வாய் வெட்டி காவிரியின் துணை ஆறுகளான பவானி ஆற்றையும், நொய்யல் ஆற்றையும் இணைத்து, உலகம் வியக்க கீழிலிருந்து மேலாக நீரைத் திருப்பி, வறண்டு கிடந்த கொங்கு மண்டலத்தைப் பொன் விளையும் பூமியாக, பயிர் செழித்து உயிர் செழிக்கும் தாய்நிலமாக மாற்றிய பெரும்பாட்டன் காலிங்கராயன் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?

கொங்கு நாட்டு மக்களால் அண்ணன்மார் சாமிகளாகப் போற்றி வணங்கப்பெறும் பண்பாட்டு நாயகர்களான பொன்னர் – சங்கர் அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே? உங்கள் தந்தையே அவர்களின்

புகழ் வரலாற்றை பொன்னர் – சங்கர் திரைப்படமாக உருவாக்கினார்கள்தானே? அப்பெயரை வைத்திருக்கலாமே?

இவர்களின் பெயரையெல்லாம் விடுத்து ஐயா ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததன் காரணமென்ன? ஜி.டி.நாயுடுவை இந்தியாவின் எடிசன் என்று எப்படி கூறுகிறீர்கள்? எடிசன் கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. ஜி.டி.நாயுடு கண்டுபிடிப்புகளில் அப்படி எதுவொன்று இன்றளவும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது? எதற்காக அவர் பெயரை வைத்துள்ளீர்கள்?

ஜி.டி. என்பது உயிரெழுத்தா? மெய்யெழுத்தா? ஆங்கிலம் தானே? எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று முழங்கியவர்கள் ஜி.டி. என்று ஆங்கில முன்னொட்டுக்களில் பெயர் சூட்டுவது ஏன்? இதுதான் திமுக ஆட்சியாளர்கள் தமிழை வளர்க்கும் முறையா?

எதிலும் சாதிப்பெயர்கள் இருக்கக்கூடாது; எல்லாவற்றிலும் சாதியை ஒழித்துவிட்டோம் என்று பேசிய திராவிடத்திருவாளர்கள், பெயரின் பின்னால் சாதிப்பெயரை நீக்கிய திராவிட இயக்கம் என்று நூற்றாண்டு விழா கொண்டாடியவர்கள் ஜி.டி.நாயுடு என்ற சாதிப்பெயரைச் சூட்டுவது ஏன்? திராவிட இயக்கத்தின் பிதாமகர் பெரியாரின் உடனிருந்த உற்ற தோழரின் பெயரிலிருக்கும் சாதியையே ஒழிக்க முடியாதவர்கள் ஊரில் உள்ள சாதியை எப்படி ஒழிப்பீர்கள்? இதுதான் திராவிட இயக்கம் சாதியை ஒழித்த முறையா?

சென்னையில் நந்தனம் சாலைக்கு முதலில் தெய்வத்திருமகன் முத்துராமலிங்கத்தேவர் சாலை என பெயர் வைத்துவிட்டு பிறகு அதை முத்துராமலிங்கனார் சாலை என்று மாற்றிய இவ்வரசு பாலத்திற்கு சாதியோடு பெயரை சூட்டுவது ஏன்?

பொது இடங்களுக்கு தேவர், தேவேந்திரர் பெயர்களை வைத்தால் சாதி கலவரம் வரும்? வன்னியர், பறையர் பெயரை வைத்தால் சாதி கலவரம் வரும் என்று தவிர்க்கும் தமிழ்நாடு அரசு, நாயுடு என்ற சாதிப்பெயரை வைப்பது எப்படி? நாங்கள் வாண்டையார் என்றால் வரும் சாதி, நாங்கள் படையாட்சி என்றால் சாதி, நீங்கள் நாயுடு என்றால் மட்டும் வராதா? நாயுடு என்பது சாதிப்பெயர் அல்லாமல் பொதுப்பெயரா?

தமிழர்கள் நாங்கள் படையாட்சி, கவுண்டர், வாண்டையார், தேவர் என்று பேசினால், உடனடியாக சாதிவெறி என்று கூச்சலிடும் திராவிடத் திருவாளர்கள், ஜி.டி. நாயுடு என்று பெயர் வைப்பதற்கு மட்டும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காப்பது ஏன்? இது சாதிவெறி அல்லாமல் சிரங்கு சொறியா? இதுதான் பகுத்தறிவு, முற்போக்கு பெரியார் உரி உரியென உரித்த வெங்காயங்களா? இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழர்களை இப்படி ஏமாற்றப்போகிறீர்கள்? ஊரில் உள்ள தமிழ் சாதியை எல்லாம் ஒழித்துவிட்டு தங்கள் சாதியை காப்பாற்றுவதுதான் திராவிடத்தின் சாதி ஒழிப்பா?

இன்று ஒரு பக்கம் சாதிப் பெயர்களை நீக்குதல் / மறுபெயரிடுதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஆணையாக வெளியிட்டுவிட்டு இன்னொரு பக்கம் சாதியோடு பாலத்திற்கு பெயரிடும் இரட்டை நிலைப்பாட்டுக்கு பெயர்தான் திராவிட மாடலா? கடந்த ஜூன் மாதம் தெருக்களுக்கு சாதிப்பெயரை நீக்க அரசாணை வெளியிட்டது திமுக அரசு. ஆதிதிராவிட நல விடுதி என்பதை சமூகநல விடுதி என்று வெறும் கட்டிடத்திற்குப் பெயர் மாற்றியதையே, சமூகநீதி சாதனைபோல் பேசிய திமுக அரசு, ஜி.டி.நாயுடு மேம்பாலம் என்று சாதிப்பெயரைச் சூட்டுவது அயோக்கியத்தனமல்லவா? தமிழர் மண்ணில் தமிழர்க்கென்று எந்த தனித்த அடையாளமும் இருக்கக்கூடாது என்ற தீய எண்ணத்தை தவிர வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்? இது தமிழ்ப்பேரினத்திற்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அவமதிப்பாகும்.

இதையும் படிங்க: தென்னிந்தியாவிலேயே நீளமான உயர்மட்ட பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஆகவே, கோவை – அவினாசி சாலை மேம்பாலத்திற்கு ஐயா ஜி.டி.நாயுடு பெயரை வைக்கும் முடிவை கைவிட்டு, தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களாக, கொங்கு மக்களின் பண்பாட்டுப் பெருமைகளாகத் திகழும் பாட்டன்கள் தீரன் சின்னமலை, கொடி காத்த குமரன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், முதல் மொழிப்போர் வீரர் பல்லடம் பொன்னுசாமி, மாமன்னர் காலிங்கராயன், அண்ணன்மார் சாமிகளான பொன்னர் – சங்கர் ஆகியோரின் பெயர்களில் ஒன்றைச் சூட்ட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.” என சீமான் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



Source link


Spread the love
  • Related Posts

    போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : கலைக்கல்லூரி மாணவிகள் சைக்கிள்  பேரணி | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 11:49 PM IST இந்த குழுவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள்  போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற கோக்கத்துடன் சைக்கிள் விழுப்புணர்வு பேரணியை நடத்தினர் சைக்கிள் பேரணி கொடைக்கானல் ஏரிச்சாலை…


    Spread the love

    கரூர் அசம்பாவிதம்; விஜய்யிடம் சிபிஐ விசாரணை: கனிமொழி எம்.பி. கொடுத்த பதில் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 19, 2026 1:33 PM IST கரூர் அசம்பாவிதம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்துவது குறித்தான கேள்விக்கு திமுக எம்.பி. கனிமொழி பதில் அளித்துள்ளார். News18 அதிமுக பொதுச் செயலாளர்…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *