மூணாறு: தீவனத்துக்காக காட்டை விட்டு வெளியேறிய யானைக் கூட்டம் மூணாறு அருகே உள்ள புல்மேட்டில் முகாமிட்டுள்ளன. சாலைக்கு மிக அருகில் இருந்த காட்டு யானைகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
மூணாறு அருகே மாட்டுப்பட்டி அணையின் கரையில் புல் மேடுகள் அதிகம் உள்ளன. இங்கிருக்கும் புற்களை உண்பதற்காக காட்டில் இருந்து வரும் யானைகள் அடிக்கடி இங்கு முகாமிடுவது வழக்கம். மாட்டுப்பட்டி, எக்கோ பாயின்ட் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் இந்த புல் மேடுகள் அமைந்துள்ளன. இதனால் யானைகள் அங்கு வரும் போது சுற்றுலாப் பயணிகள் பலரும் இங்கு வாகனங்களை நிறுத்தி, அவற்றை ரசிப்பது வழக்கம்.
இந்நிலையில் இப்பகுதியில் 4 யானைகள் முகாமிட்டுள்ளன. பிற்பகலில் வந்த இந்த யானைகள் சுமார் ஒரு மணி நேரம் வரை அங்கிருந்த புற்களை உண்டு கொண்டிருந்தன. இதனை சுற்றுலாப் பயணிகள் பலரும் பார்த்தும், வீடியோ, புகைப்படங்களாக எடுத்தும் பதிவு செய்தனர். பின்னர், யானைகள் அணைக்கு அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு திரும்பிச் சென்றுள்ளன.





