
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டம் முத்துக்குடாவில் ரூ.3.06 கோடியில் படகு குழாம், பார்வையாளர் கூடம், நிர்வாகக் கட்டிடம், வாகன நிறுத்துமிடம், நடை பாதை, குடிநீர், கழிப்பறை, மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகளுடன் கடற்கரை சுற்றுலாத் தலம் அமைக்கப்பட்டது.
கடலில் தீவு போன்றுள்ள அலையாத்திக் காட்டில் ஆயிரக்கணக்கான பறவைகள் தங்கி உள்ளன. தீவுப் பகுதியை ரசிக்கும் வகையிலும், உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள இச்சுற்றுலா தலத்தை சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

முத்துக்குடா சுற்றுலாத் தலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் எம்.அருணா கலந்து கொண்டார். பின்னர், குத்துவிளக்கு ஏற்றியதுடன், படகு குழாமில் படகு சவாரியையும் அவர் தொடங்கி வைத்தார். பின்னர், ஆட்சியர் எம்.அருணா உள்ளிட்டோர் படகில் சென்று அலையாத்திக் காட்டை பார்வையிட்டனர்.
இதுகுறித்து சுற்றுலாத் துறை அலுவலர்கள் கூறியபோது, ‘‘தொடர்ந்து சுற்றுலாத் தலம் செயல்படும். படகுகள் சேவையும் இருக்கும். சுற்றுலாத் தலத்துக்கு மக்களின் வருகையை பொறுத்து கூடுதல் வசதிகள் உடனுக்குடன் ஏற்படுத்தப்படும். மாலை நேரத்தில் ரம்மியமான சூழலைக் கொண்டுள்ள இச்சுற்றுலாத் தலத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.

இந்நிகழ்ச்சியில், சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மண்டல மேலாளர் ப.பிரபுதாஸ், மாவட்ட சுற்றுலா அலுவலர் ரா.கார்த்திக், உதவி செயற்பொறியாளர் எஸ்.ரத்தினவேல், உதவி சுற்றுலா அலுவலர் பெ.முத்துசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.