மாமல்லபுரம்: மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை கடற்கரைப் பகுதியில் சர்வதேச காற்றாடி திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவை அமைச்சர்கள் ராஜேந்திரன், தா.மோ. அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் ஆகியவை இணைந்து, 4-வது முறையாக நடத்தும் சர்வதேச காற்றாடி திருவிழா நேற்று மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் தொடங்கியது. இத்திருவிழா 4 நாட்களுக்கு நடக்கிறது.
இதில், மலேசியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் காற்றாடி பறக்க விடுவதில் கைதேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் என 40-க்கும் மேற்பட்டோர் 10 அணிகளாக பிரிந்து காற்றாடிகளை பறக்க விட்டனர்.
இதில், அமைச்சர்கள் ராஜேந்திரன், தா.மோ. அன்பரசன் ஆகியோர் பங்கேற்று காற்றாடிகளை பறக்க விட்டு தொடங்கி வைத்தனர். முதல் நாளான நேற்று வானில் பறந்த காற்றாடிகளை சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இத்திருவிழா தினமும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடக்க உள்ளது. இதில், ஆட்சியர் சினேகா, எம்எல்ஏக்கள் பாலாஜி, வரலட்சுமி, திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொது மேலாளர் கவிதா, மண்டல மேலாளர் வெங்கடேசன், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் அன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






