Last Updated:
“மருத்துவரைச் சந்திக்காமல் சுய மருத்துவம் செய்வதோ/ ஏற்கனவே எழுதிய பரிந்துரை சீட்டை வைத்து மாத்திரை மருந்துகள் வாங்கி உண்பதோ தவறு”
பருவமழை தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் நாம் மிகமிக கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும், செய்யக்கூடாத தவறுகள் குறித்தும் நமக்கு சில அறிவுரைகளையும் கொடுத்துள்ளார் பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. அவற்றை இங்கே காணலாம்:
1) இந்த காலத்தில் ஏற்படும் காய்ச்சலுக்கு தனிக்கவனம் தேவை. குறிப்பாக குழந்தைகள், முதியோர்கள் மற்றும் இணை நோய்கள் இருப்பவர்களை அதீத கவனத்துடன் அணுக வேண்டும்.
2) மருத்துவரைச் சந்திக்காமல் சுய மருத்துவம் செய்வதோ/ ஏற்கனவே எழுதிய பரிந்துரை சீட்டை வைத்து மாத்திரை மருந்துகள் வாங்கி உண்பதோ தவறு. மருத்துவர் எத்தனை நாட்களுக்குப் பிறகு அவரை சந்திக்க கூறுகிறாரோ அதை சரியாகப் பின்பற்ற வேண்டும். ரத்தப் பரிசோதனை பரிந்துரைக்கப்பட்டால் செய்து கொள்ள வேண்டும்.
மருத்துவர்கள்
3) பொதுவாக பருவகால சீசனல் வைரஸ் காய்ச்சல் என்பது ஒரு வார காலம் வரை நீடித்து தானாக குறையும். பெரும்பான்மை மக்களுக்கு உயிர் ஆபத்தற்ற பிரச்சனையாக கடந்து செல்லும். ஆனாலும் அதீத காய்ச்சல் / உடல் வலி இருப்பதால் கட்டாயம் சில நாட்கள் ஓய்வு தேவை. தற்கால வேகமான ஓட்டத்தில் ஓய்வின் முக்கியத்துவத்தை நோய்தான் நமக்கு உணர்த்துகிறது. எனவே நோய் நிலை ஏற்படும் போது ஓய்வு என்பதும் சிகிச்சையிலும் குணமாதலிலும் முக்கியமான பங்காற்றுகிறது.
4) எந்தக் காய்ச்சலாக இருந்தாலும் உடலின் நீர்ச்சத்து இழப்பு (DEHYDRATION) என்பது பொதுவானது. எனவே காய்ச்சல் நேரங்களில் தினமும் கட்டாயம் உடல் எடைக்கு ஒரு கிலோவுக்கு 30-40 மில்லி நீர் கட்டாயம் பருகி வர வேண்டும். அதாவது, உடல் எடை 80 கிலோ என்றால், கிலோவுக்கு 30 – 40 மில்லி நீர் வீதம் 80×40 = 3,200 மில்லி நீர் கட்டாயம் பருக வேண்டும். இந்த நீரை ஓ.ஆர்.எஸ் எனும் வாய்வழி நீர்ச்சத்தை அதிகரிக்கும் பொடியைக் கலந்து பருகுவது இன்ன்ம் சிறந்தது. ஒரு லிட்டர் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரில் 21 கிராம் ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டைக் கலந்து பருகி வர வேண்டும்.

5) உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கு பாராசிட்டமால் மருந்து பாதுகாப்பானது. எனினும் எடையில் ஒவ்வொரு கிலோவுக்கு 15 மில்லிகிராம் என்ற அளவில் மட்டுமே அதைக் கொடுக்க வேண்டும். ஆறு மணிநேரம் இடைவெளி அவசியம். உதாரணமாக 10 கிலோ எடை கொண்ட குழந்தைக்கு 10×15 = 150 மில்லிகிராம் ஒருவேளைக்கு என்று ஆறு மணிநேரத்திற்கு ஒருமுறை வழங்கி வரவும்.
6) இடைப்பட்ட நேரத்தில் ஜுரம் அதிகமானால் நெற்றி, நெஞ்சுப்பகுதி, வயிறு, கால், கை உள்ளிட்ட பகுதிகளில் குளிர் நீரை வைத்து ஒற்றி எடுப்பது வெப்பத்தைத் தணிக்கும். காய்ச்சல் ஏற்படின் மருத்துவரை சந்திப்பதே சரி
7) முக்கியமான நேரங்களை சுயமருத்துவம் செய்து கழித்து விட்டு நேரம் தாழ்த்தி மருத்துவரை சந்திப்பது தவறு. ஆபத்தான போக்கு என்பதால், அதை தவிர்த்துவிடவும்”
October 22, 2025 2:04 PM IST
[]
Source link

