
Last Updated:
கடலூரில், மது குடிக்க பணம் கேட்டு கொடுக்காத தாத்தாவை, பேரன் பிரகாஷ் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரில் மது குடிக்க பணம் கேட்டு கொடுக்காத தாத்தாவை, பேரனே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வெள்ளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. 70 வயதான இவர், 65 வயதான தனது ராணியுடன் சிறிய குடிசை வீட்டில் வசித்து வந்தார். இந்த தம்பதியின் மகள் கலைவாணி திருமணமாகி, கணவருடன் வாழப்பட்ட பகுதியில் வசித்து வருகிறார். இருந்த போதும், இவரின் மகன் பிரகாஷ், குழந்தைப்பருவத்தில் இருந்தே தனது தாத்தா – பாட்டி வீட்டிலேயே வளர்ந்துள்ளார்.
தனது மகள்வழிப் பேரன் என்பதால் பிரகாஷை, முனுசாமி மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். ஆனால், 26 வயதான பிரகாஷ், வெல்டர் வேலை செய்து வந்த போதும், அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தாத்தா, பாட்டியை தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும், மதுபோதைக்கு அடிமையாகி வேலைக்குச் செல்லாமல் சுற்றித் திரிந்துள்ளார்.
இந்த நிலையில் பிரகாஷ், மதுபோதையில் வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. தள்ளாடியபடி வந்தவர் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு தாத்தாவிடம் தகராறு செய்துள்ளார். அதற்கு பணம் கொடுக்க முடியாது என்று முனுசாமி கூறியுள்ளார்.
உடனே, ஆத்திரத்தில் பிரகாஷ் அவரை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார். தடுக்க வந்த பாட்டியையும் கீழே தள்ளிவிட்டுத் தாக்கியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், வயதான தம்பதி இருவரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், படுகாயமடைந்த முனுசாமி, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால், முதியவர் முனுசாமி அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
காயமடைந்த ராணிக்கு, கடலூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நெல்லிக்குப்பம் போலீசார், இளைஞர் பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதைக்கு அடிமையான பேரன், குடிக்க பணம் கேட்டு எடுத்து வளர்த்த தாத்தாவை அடித்துக் கொலை செய்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Cuddalore,Tamil Nadu
July 11, 2025 8:35 AM IST