
சென்னை மடிப்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி 188வது திமுக வட்ட செயலாளர் மடிப்பாக்கம் செல்வம் கூலிப்படை கும்பலால் கொடூரமாக வெட்டி படு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
6 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், இந்த கொலை அரசியல் ரீதியான கொலையா? தொழில் ரீதியான கொலையா? எனத் தெரியாமல் குழப்பத்திலேயே இருந்தனர்.
கொலை நடந்த அடுத்த 2வது நாளில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கூலிப்படையை சேர்ந்த விக்னேஷ், கிஷோர் குமார், நவீன், சஞ்சய், புவனேஷ்வர் ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
7 பேரிடம் நடத்திய விசாரணையில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கூலிப்படை தலைவன் ரவுடி முருகேசன் சொன்னதால் தான், மடிப்பாக்கம் செல்வத்தை கொலை செய்தோம் என குறிப்பிட்டனர்.
இதையடுத்து ரவுடி முருகேசனை ஒரு மாதமாக தேடி வந்த போலீசார் கடந்த மார்ச் 21ம் தேதி அம்பத்தூர் பகுதியில் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பலதிடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன.
மடிப்பாக்கம் குபேரன் நகர் விரிவு பகுதியில் கேட்பாரற்று இருந்த 4 கிரவுண்ட் நிலத்தை ரவுடி முத்து சரவணன் என்பவர் ஆக்கிரமிக்க முயற்சித்துள்ளார். மடிப்பாக்கம் செல்வம் அதற்கு இடைஞ்சலாக இருந்ததால் முத்து சரவணன் கூறியதன் பேரில் கூலிப்படையை வைத்து கொலை செய்ததாக முருகேசன் கூறியுள்ளார்.
இதையடுத்து கூலிப்படைத் தலைவன் முருகேசனுக்கு ரூட் எடுத்துக் கொடுத்த முத்து சரவணனை கடந்த 28ம் தேதி போலீசார் கைது செய்தனர். முத்து சரவணனிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான உண்மைக் காரணம் தெரியவந்தது.
மடிப்பாக்கம் செல்வத்தை அவர் உடன் இருந்தவர்களே கொலை செய்த பகீர் உண்மை அம்பலமானது. மடிப்பாக்கம் செல்வத்துடன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த திமுக மாவட்ட துணை செயலாளர் குட்டி என்கிற உமாமகேஸ்வரன், மடிப்பாக்கம் 188வது வட்ட திமுக மீனவர் அணி அமைப்பாளர் சகாய டென்ஸி, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் பொருளாளர் ரவி என்கிற ரமேஷ், சென்னை வேளச்சேரி பத்திர பதிவு எழுத்தர் ஜெயமுருகன் ஆகிய நான்கு பேர் இந்த படுகொலைக்கு மூலகாரணம் என்பது தெரியவந்தது.
அவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் நான்கு பேரும் ஒன்றினைந்து திட்டம் தீட்டி மடிப்பாக்கம் செல்வத்தை கொலை செய்தது அம்பலமானது
சென்னை தெற்கு மாவட்ட திமுகவில் குறுகிய காலத்தில் அனைவரும் திரும்பி பார்க்ககூடிய அளவுக்கு செல்வத்தின் வளர்ச்சி அமைந்திருந்தது. இதனால், தாங்கள் தொழில் ரீதியாக பாதிக்கப்படுவதாக உணர்ந்த இவர்கள் 4 பேரும் மடிப்பாக்கம் செல்வத்தை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.
4 பேரும் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து கூலிப்படையை அமைக்குமாறு புரட்சிபாரதம் பிரமுகர் ரவியிடம் கூறியுள்ளனர். அவர் ரவுடி முத்து சரவணனிடம் கூற, அவர் மூலம் கூலிப்படைத் தலைவன் முருகேசனிடம் பணத்தை கொடுத்தது தெரியவந்தது.
ரவுடி முத்துசரவணன் தான் இந்த கொலையை அரங்கேற்ற முருகேசனுக்கு திட்டம் தீட்டிக் கொடுத்துள்ளார் என்பதும் அம்பலமானது. இந்த படுகொலைக்குப் பின் இவர்கள் 4 பேரின் பெயர்கள் வெளிவரக்கூடாது என்பதற்காக கொலைக்கு முன்னதாக பொய்க்காரணம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.
கேட்பாரற்று கிடந்த நிலத்தை அபகரிக்க முத்து சரவணன் முயல்வதாக காட்டிக் கொண்டு அதன் மூலம் செல்வத்துடன் பகையை உருவாக்கிக் கொண்டுள்ளார். இந்த பகையால்தான் கொலை நடந்தததாக போலீசாரும் எளிதில் நம்பி விடுவார்கள் என நினைத்துள்ளனர்.
ஆனால் போலீசாரின் கிடிக்கிப் பிடி விசாரணையில் உண்மை முழுவதும் அம்பலமாகியுள்ளது. இந்த கொலையில், கூலிப்படையினருக்கு பணத்தை எடுத்துச் சென்று கொடுத்த சதீஷ்குமார், கௌதமன் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கில் சாமர்த்தியமாக செயல்பட்டு 15 பேரை கைது செய்த போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.