
Last Updated:
திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில், அர்ச்சகர் வெங்கடேஸ்வர் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த ஜனனி போலி இணையதளம் மூலம் பிரசாதம் மோசடி செய்தது அம்பலமாகி, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் ஆலயத்தில் நேரடியாக பல ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்து வந்தாலும், ஆலயத்திற்கு வர முடியாதவர்களுக்காகவும், வெளிநாடு மற்றும் வெளி மாநில பக்தர்களுக்காகவும் கோயில் நிர்வாகம் சார்பில் ஆன்லைன் பிரசாதம் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்து பணம் செலுத்தும் பக்தர்களுக்கு கொரியர் மூலம் சாமி பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
சமீபத்தில் அதில் பல குலறுபடிகள் ஏற்பட்டு பணம் செலுத்திய பக்தர்களுக்கு பிரசாதம் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டுள்ளனர். பிரசாதம் வரும், வரும் என காத்திருந்து காத்திருந்து பக்தர்கள் சோர்ந்து போனார்கள். கடவுளுக்கு அனுப்பிய காசு தானே என பலரும் கண்டு கொள்ளாமல் விட, பிரசாதம் வராத விரக்தியில் சிலர் இது குறித்து கோவில் நிர்வாகத்தில் புகார் தெரிவித்தனர்.
புகாரின் பேரில் கோயில் நிர்வாக அலுவலர் அருணகிரிநாதன் விசாரணை மேற்கொண்டுள்ளார். அதில் பல மெகா மோசடி நிகழ்ந்திருப்பது அம்பலமாகி உள்ளது. உடனே அது குறித்து வெளியில் சொன்னால் மோசடிக்காரர்கள் தப்பித்து விடுவார்கள் என நினைத்து, அவர் போலீசில் புகாரளித்துள்ளார். உடனே வழக்குப்பதிந்த காரைக்கால் சைபர் கிரைம் போலீசார், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் பெயரில் போலி இணையதள முகவரி தொடங்கி கைவரிசை காட்டியதை கண்டுபிடித்தனர்.
ஆலயத்தின் நான்கு அர்ச்சகர்களில் ஒருவரான வெங்கடேஸ்வர குருக்கள், பெங்களூரைச் சேர்ந்த ஜனனி பரத் என்ற பெண்ணுடன் சேர்ந்து போலியாக www.thirunallartemple.com என்ற இணையதள முகவரியை உருவாக்கி நேக்காக பக்தர்களுக்கு விபூதி அடித்துள்ளனர். ஆன்லைனில் ஆடர் செய்தால் பிரசாதம் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் என விளரம்பரம் செய்து பல லட்ச ரூபாயை கரந்துள்ளனர்.
பணம் செலுத்தியவர்களுக்கு சென்னையிலிருந்து போலியான பிரசாதங்கள் அனுப்பி ஏமாற வைத்துள்ளனர். இப்பெரும் மோசடி சம்பவத்தில் அர்ச்சகர் வெங்கடேஸ்வரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் தொடர்புடைய ஜனனி என்பவரை பெங்களூரில் இருந்து அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
போலி வெப்சைட் உருவாக்கி கொடுத்த டீம் யார்? பக்தர்கள் அனுப்பும் பணம் எந்தெந்த வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருநள்ளாறில் இருந்து பிரசாதம் அனுப்புவது போல சென்னையில் இருந்து பார்சல் செய்து அனுப்பியவர்கள் யார்? அதற்காக அவர்கள் வாங்கிய கமிஷன் எவ்வளவு? உள்ளிட்ட கோணங்களிலும் விசாரித்து வருகின்றனர்.
இதனை அடுத்து கைதான அர்ச்சகர் வெங்கடேஸ்வர் மற்றும் ஜனனி உள்ளிட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலய பெயரில் பல ஆண்டுகளாக செயல்பட்ட போலி இணையதள விவகாரத்தில் கோயில் அர்ச்சகரே கைதாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலய பெயரில் பல ஆண்டுகளாக செயல்பட்ட போலி இணையதள விவகாரத்தில் திடீர் திருப்பமாக ஆலய அர்ச்சகரே மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.
February 14, 2025 10:03 PM IST