Last Updated:
டிட்வா புயலுக்கு பின் வானிலை சீராகி சற்று வெயில் அடிக்க தொடங்கியதால் பாம்பனில் கருவாடு உற்பத்தி தொடங்கி கருவாடு காய வைக்கும் பணியில் மீனவ பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக இருக்கும் நிலையில், பிடித்து வரும் மீன்களில் பாதி மீன்கள் கருவாடு உற்பத்தி செய்யப்படுகிறது. கடலில் பலத்த காற்று வீசும் நேரம் மற்றும் மீன்பிடி தடைக்காலம் போன்ற நேரங்களில் கருவாடு உற்பத்தி தொழில் கை கொடுப்பதால் இதில் மீனவர்கள், மீனவ பெண்கள் ஈடுபட்டு பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
தற்போது, வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து கருவாடு உற்பத்தி தொழில் முடங்கியது. அவ்வப்போது வெயில் அடிக்கும் நேரத்தில் கருவாடு காய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வங்ககடலில் டிட்வா புயல் உருவாகி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு வாரமாக மீன்பிடி தொழிலும் பாதித்து, கருவாடு உற்பத்தியும் பாதித்தது. இதனைத்தொடர்ந்து புயல் வலுவிழந்த நிலையில் சீரான வானிலை நிலவி சற்று வெயில் அடிக்க தொடங்கியதால் கருவாடு உற்பத்தி மீண்டும் தொடங்கி காய வைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஒரு வாரத்திற்கு முன்பு மீன்பிடிக்கச் செல்லும்போது மீன்களை வாங்கி வைத்தோம். அதன்பின் மழை பெய்ய தொடங்கியதால் கருவாடு உற்பத்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டு, உப்பு வைத்து பாதுகாத்து வைத்தோம். தற்போது சற்று வெயில் அடிக்க தொடங்கி உள்ளதால் மீண்டும் உற்பத்தியை ஆரம்பித்துள்ளோம்.
உற்பத்தி குறைவாக இருப்பதால் இரட்டிப்பு விலைக்கு வெளியில் விற்க்கப்படுகிறது. இங்கு வாங்கி சென்று வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் எங்களிடம் குறைவான விலைக்கு வாங்கி மழையினை காரணம் காண்பித்து, வெளியில் பாதிக்கு பாதி விலை உயர்த்தி விற்பனை செய்கின்றனர். உள்ளூரில் உற்பத்தி செய்யும் மீனவர்களுக்கு லாபம் இல்லாமல் உள்ளது. ஆனால் வியாபாரிகள் பல மடங்கு லாபம் வைத்து விற்பனை செய்வதால் விலை உயர்ந்துள்ளது என மீனவர்கள் தெரிவித்தனர்.
Ramanathapuram,Ramanathapuram,Tamil Nadu
December 03, 2025 1:00 PM IST





