
Last Updated:
பாம்பன் ரயில்வே பாலத்தின் புதிய தூக்குப்பாலம் தினமும் பயன்படுத்தப்படும். இது சிறு துறைமுகங்களுக்கு மாதம் 40 லட்சம் ரூபாய் வருமானத்தை அதிகரிக்கும்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் வகையில் கடல் வழியே 1914 ஆம் ஆண்டு ரயில்வே பாலம் கட்டப்பட்டது. நூற்றாண்டை கடந்துவிட்ட பாலத்துக்கு மாற்றாக, 545 கோடி ரூபாயில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் நடுவே, சிறியவகை கப்பல்களும் செல்லும் வகையில், ஆசியாவிலேயே முதல் முறையாக லிப்ட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து நேரடியாக ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் மண்டபம் வந்தார். பைஜாமா குர்தாவில் வந்த அவர், தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டைக்கு மாறி, புதிய பாம்பன் பாலத்தை திறந்துவைத்தார்.
இதையடுத்து பாம்பனில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புதிய பாலம் வழியே ரயில் இயக்கப்பட்டது. ரயில்வே பணியாளர்கள், பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு அந்த ரயில் சென்றது. அதன்பின் செங்குத்துத் தூக்குப்பாலம் மேல் நோக்கி உயர, கடலோர காவல் படையின் ரோந்துக் கப்பல் பாலத்தை கடந்து சென்றது.
இதனிடையே பாம்பன் ரயில்வே பாலத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தூக்குப்பாலத்தை திறப்பதற்கு தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் கீழ் உள்ள சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையிடம் அனுமதி பெற வேண்டும். பாம்பன் பாலத்தை கடக்க விரும்பும் சிறிய கப்பல்கள், படகுகள் பாம்பன் துறைமுகத்திற்கு அருகேயுள்ள அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும்.
கடல் சார் வாரியத்தின் அதிகாரிகள் பாலத்தை தூக்கும் நேரத்தை தீர்மானித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிப்பார். அதன்பிறகே பாலம் தூக்கப்பட்டு, அதன் கீழ் கப்பல்கள் பயணிக்கும் இதற்கு முன்பு இருந்த பழைய பாலம் தினமும் தூக்கி இறக்க முடியாத நிலையில் இருந்த நிலையில் புதிய பாலம் நவீன முறையில் கட்டப்பட்டுள்ளதால், தினமும் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பழைய ரயில்வே பாலத்தின் கீழ் கப்பல்கள் பயணிப்பதன் மூலமாக தமிழகத்தில் சிறு துறைமுகங்கள் துறைக்கு மாதம் 40 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைத்து வந்தது. தற்போது புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் அது மேலும் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
Ramanathapuram,Ramanathapuram,Tamil Nadu
April 06, 2025 10:18 PM IST