
Last Updated:
பாமக நிறுவனர் ராமதாஸ், மதுரை, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர்களை மாற்றி புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். தந்தை-மகன் மோதல் காரணமாக 12 நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர்.
மதுரை, தென்காசி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாமக மாவட்டச் செயலாளர்களை மாற்றி கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணியுடன் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தந்தை-மகன் இடையேயான விரிசலுக்கு மத்தியில் அன்புமணிக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகளை நீக்கிப் புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்து வருகிறார்.
இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், அரசியல் ஆலோசனைக் குழுத் தலைவர் தீரன், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி ஆகியோரைச் சந்தித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, 12 நிர்வாகிகளை நீக்கிவிட்டுப் புதிய நிர்வாகிகளை நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். அதன்படி, பாமகவின் மதுரை மாநகர், மதுரை புறநகர் தெற்கு, ராமநாதபுரம் கிழக்கு மற்றும் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட்டுப் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மதுரையில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி புறநகர் தெற்கு மாவட்டத் தலைவராக ராஜாராமும், புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக முருகனும், மாநகர் மாவட்டச் செயலாளராக பாரதி பாண்டியனும், புறநகர் தெற்கு மாவட்டம் செல்லம்பாட்டி ஒன்றியச் செயலாளராக ஈஸ்வரனும், மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் மதுரை மேற்கு ஒன்றியச் செயலாளராக ராஜகோபாலனும், புறநகர் வடக்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளராக முருகனும், மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி மாவட்டப் பொருளாளராக எஸ். சரோஜினியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளராக சந்தானதாஸும், தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளராக சிங்கராயனும், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அமைப்புச் செயலாளராக கணேசனும், தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளராக திருமலைசாமியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் தற்போது வரை பாமகவின் பொருளாளர், 27 மாவட்டச் செயலாளர்கள், 6 மாவட்டத் தலைவர்களை ராமதாஸ் மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
June 03, 2025 4:41 PM IST