
Last Updated:
கேரளாவில் நிகழ்ந்த அரசியல் மரணங்களை தொடர்ந்து பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்படக்கூடும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை கடுமையாக விமர்சித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய THE LURKING HYDRA புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி மேடையில் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றப்பின் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் இல்லை. அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் தான். அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டுவதை ஏற்றுகொள்ள முடியாது.
முந்தைய காலங்களில் மக்களை கொல்லுவார்கள் அதன் பின் பேச்சு வார்த்தை நடத்த அரசிடம் கேட்பார்கள் அரசும் பேச்சு வார்த்தை நடைபெறும். முந்தைய காலங்களில் நம்முடைய நாடாளுமன்ற தாக்கப்பட்டது. பிரதமர் மோடி 2014ஆம் ஆண்டு பதவியேற்ற பின் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவதை கடந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டது.
தீவிரவாதத்திற்கு எதிராக எடுத்த கடுமையான நடவடிக்கை காரணமாக தற்போது நாட்டில் அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு காஷ்மீருக்கு அதிக சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இந்த புத்தக்கம் ஒரு முக்கியமான ஆவணம். தீவிரவாதத்திற்கு எதிரான வாதத்தை முன்வைக்கிறது. ஜெனரல் மித்ரன் ஒரு புத்திசாலி மட்டும் இல்லை, அவர் ஒரு நல்ல ராணுவர் கூட. ஒரு பிரச்சனையின் ஆழத்தை தெரிந்த ஒருவர். இந்திய ராணுவத்திற்கு தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் பல அனுபவங்கள் உள்ளன. இந்த புத்தகத்திற்காக ஜெனரல் மித்ராவிற்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்’ எனவும் பேசினார்.
மேலும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்று கூறிய ஆளுநர், இவர்கள் மாணவர்களை போலவும், மனித உரிமை இயக்கம் போலவும் அரசியல் இயக்கம் போலவும் முகமூடிகளை அணிந்து கொண்டு நம் நாட்டில் இயங்கி வருவதாகவும், மேலும் தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரு பின்புலமாக செயல்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். பல நாடுகளுக்கு தீவிரவாதத்திற்கு ஆட்களை அனுப்பும் இயக்கமாகவும் உள்ளது என்ற குற்றச்சாட்டை தெரிவித்தார்.
கேரளாவில் நிகழ்ந்த அரசியல் மரணங்களை தொடர்ந்து பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்படக்கூடும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையும் இதே கருத்தை தனது கட்சி நிர்வாகிகளிடம் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை கடுமையாக விமர்சித்து ஆளுநர் பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.