
பழநி மலையில் உள்ள செயற்கை அருவியை அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் செல்ல ரோப் கார் சேவை, கடந்த 2004-ல் தொடங்கப்பட்டது. ரோப் காரில் செல்லும் போது பழநி நகரின் அழகையும், சுற்றியுள்ள வயல்வெளி மற்றும் கொடைக்கானல் மலையின் அழகையும் ரசிக்கலாம். இது தவிர, பழநி மலையை ரசிக்கும் விதமாக மலையின் ஒரு இடத்தில் செயற்கை அருவி அமைக்கப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் இருந்தும், ரோப் காரில் செல்லும் போதும் இந்த அருவியைக் காணலாம்.
மேலும், குழந்தைகளை குஷிப்படுத்தும் விதமாக ரோப் கார் நிலையம் அருகே பசுமையான புல்வெளிகளுடன் யானை, ஒட்டகச் சிவிங்கி, குரங்கு, பசுக்கள் உள்ளிட்ட சிலைகளுடன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ரோப் காருக்காக காத்திருக்கும் பக்தர்கள் இந்த பூங்காவை பார்த்து ரசிக் கின்றனர். செயற்கை அருவி பகுதியில் இருந்த பூச்செடிகள் காய்ந்து கருகியும், தண்ணீர் கொட்டும் பகுதி பாசி படர்ந்தும் போதிய பராமரிப்பு இன்றி புதர் சூழ்ந்தும் காணப்பட்டன.
இதையடுத்து செயற்கை அருவியை அழகுபடுத்த தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, தற்போது அருவியில் தண்ணீர் கொட்டும் பகுதியில் பாசி படராமல் இருக்க சுண்ணாம்பு பூசும் பணி நடக்கிறது. இதேபோல், அருவியை சுற்றியுள்ள புதர்களை அகற்றி, ரோப் காரில் செல்லும் பக்தர்கள் பார்த்து வியக்கும் வகையில் வண்ண பூச்செடிகளை நடவு செய்து அருவியின் அழகை மெருகேற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.