
திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள மன்னவனூர் சூழல் சுற்றுலாத் தலத்தில் பரிசல் சவாரி செய்தும், ஜிப்லைன் சாகசம் செய்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறை தினமான நேற்றும், இன்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூரில் வனத்துறையின் சூழல் சுற்றுலாத் தலத்தில் உள்ள ஏரியில் பரிசல் சவாரி செய்து சுற்றுலாப் பணிகள் மகிழ்ந்தனர். மேலும், ஏரியின் மேல் இரும்பு கம்பியில் ஜிப்லைன் சவாரி செய்தனர். சூழல் சுற்றுலா மையத்தில் உள்ள பசுமை புல்வெளியில் அமர்ந்தும், சிறிது தூரம் டிரக்கிங் மற்றும் குதிரை சவாரி செய்தனர்.

கொடைக்கானல் நகர் பகுதியை சுற்றியுள்ள சுற்றுலாத் தலத்தை விட ரம்மியமாக காணப்படும் இயற்கை எழில் காட்சிகளை சுற்றுலாப் பயணிகள் மேல்மலை கிராமங்களில் கண்டு ரசித்தனர். செல்லும் வழியில் பூம்பாறை கோயிலில் வழிபட்டனர்.
கொடைக்கானலில் கடந்த வாரம் தொடர் மழை காரணமாக தற்போது இதமான காலநிலை நிலவி வருகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. பகலில் அதிகபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும் நிலையில், இரவில் குறைந்த பட்சமாக 18 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. இதனால் இரவில் இதமான குளிர் உணரப்பட்டது.

வார விடுமுறை நாட்களில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம் உள்ள நிலையில் மற்ற நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிக குறைவாகவே காணப்படுகிறது.