
Last Updated:
அதிமுக அரசியல் பரபரப்பில் டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் சந்திந்து பேசியுள்ளனர்.
அதிமுகவில் அடுத்தடுத்த அரசியல் பரப்புகள் நடந்துவர முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசியுள்ளனர்.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல், அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு தே. ஜ. கூட்டணி முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேறினார் டிடிவி தினகரன். அதேபோல், ஓ. பன்னீர்செல்வமும் வெளியேறினார்.
இந்தச் சம்பவங்கள் நடந்துவந்தபோதே, முன் அறிவிப்பு கொடுத்து, கடந்த 5ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பு நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கான பணியை அடுத்த 10 நாளில் தொடங்க வேண்டும். பணி முடிவதற்கு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஆகலாம். ஒருவேளை அடுத்த பத்து நாளில் இந்தப் பணி துவங்கப்படவில்லை என்றால், நானே அந்தப் பணியைத் தொடர்வேன் என்றார். இதில் முரண்படும் விதமாக அதிமுக ஒருங்கிணைப்பில் யாரையெல்லாம் கட்சியில் சேர்க்கலாம் என்பதை பொதுச் செயலாளரே முடிவு செய்யலாம் என்றார்.
இதனையடுத்து கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், மன அமைதிக்காக ஹரித்வார் சென்று ராமரைச் சந்திக்கப் போகிறேன் என சொல்லிவிட்டு தமிழ்நாட்டில் இருந்து கிளம்பி, டெல்லி சென்று அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துவிட்டு வந்தார்.
15ஆம் தேதியோடு செங்கோட்டையன் விதித்த கெடு முடிவடைந்த நிலையில், அதுவரை இந்த விவகாரம் குறித்து பேசாத எடப்பாடி பழனிசாமி 15ஆம் தேதி சென்னை வடபழனியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “அதிமுகவின் தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர்களை கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமா? அதிமுகவின் ஆட்சி கவிழ வேண்டும் என 18 எம். எல். ஏ.க்களை ஒருவர் கடத்திச் சென்றார் அவரை கட்சியில் சேர்க்க வேண்டுமா?” என செங்கோட்டையனின் கருத்துக்கு பதில் கொடுத்தார்.
செங்கோட்டையன் விதித்த கெடு முடிவடைந்த நாளில் பதில் கொடுத்த எடப்பாடி பழனிசாமி மறுநாள் அதாவது கடந்த 16ஆம் தேதி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார். நிர்வாகிகளுடன் சென்ற எடப்பாடி பழனிசாமியை சுமார் 20 நிமிடங்கள் தனியாக சந்தித்தார் அமித்ஷா.
இப்படி அதிமுகவில் அடுத்தடுத்த அரசியல் பரப்புகள் நடந்துவர முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசியுள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற விஜடி விஸ்வநாதன் வீட்டு திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசியுள்ளனர்.
September 26, 2025 10:06 PM IST