புதுச்சேரி: நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
புதுச்சேரி அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு குழாம் செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சுண்ணாம்பாற்றில் பயணித்து பேரடைஸ் பீச்சுக்கு சென்று ஜாலியாக ஆடிப்பாடி மகிழ்ந்து மீண்டும் படகில் பயணித்து படகு குழாமுக்கு திரும்புவது புதுவித அனுபவமாக இருப்பதோடு, மனதும் புத்துணர்வு பெறும். இதனால் வாரந்தோறும் சனி, ஞாயிறு மட்டுமின்றி விடுமுறை தினங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாகவும், வீடூர் அணை திறப்பினாலும் சங்கராபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றின் படுகை அணை நிரம்பி வழிவதோடு, கடலை நோக்கி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. ஆகவே பாதுகாப்பு கருதி நோணாங்குப்பம் படகு குழாமில் படகு சவாரி நிறுத்தப்பட்டு, படகுகள் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக படகு இல்லமும் மூடப்பட்டுள்ளது. படகு இல்லம் மூடலால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா நகரமான புதுச்சேரியின் அடையாளங்களில் ஒன்றாக நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளது. புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடங்களில் முக்கியப் பங்கு வகிப்பதும் நோணாங்குப்பம் படகு குழாம் தான்.
