
நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் முதுமலை காப்பகத்தில் தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறி தனியார் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுவதால், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளிடம் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.
உலகில் 15-வது நீண்ட மலைத் தொடராக மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு வரை 60 ஆயிரம் கி.மீ., பரப்பளவு கொண்ட இந்த மலைத்தொடரில் 37 சதவீத பகுதிகள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் உள்ளது.
இதில் ஜக்கனாரை மற்றும் மாயாறு ஆகிய இரு யானைகள் வழித்தடங்கள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் யானைகள் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததாலும், வழித்தடங்களில் உள்ள தனியார் நிலங்களில் வேலிகள் அமைக்கப்பட்டதாலும், யானைகள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விளை நிலங்களில் ஊடுருவும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. இதனால் யானை-மனித மோதல் தவிர்க்க முடியாததாகி விட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஜக்கனாரை வழித்தடத்தில் குறும்பாடி, ஜக்கனாரை, மாயாறு வழித்தடத்தில் சிறியூர், மசினகுடி, பொக்காபுரம், சிங்காரா, மாவனல்லா, வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் ‘இயற்கை சுற்றுலா’ என்ற பெயரில் அப்பட்டமான விதிமீறல்கள் அறங்கேறி வருவதாக வன ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரிசார்ட்களில் தங்கும் சுற்றுலாப் பயணிகளை தடை விதிக்கப்பட்ட வனப்பகுதிக்குள், இயற்கை சுற்றுலா என்ற பெயரில் ரிசார்ட் நிர்வாகத்தினர் அழைத்து செல்கின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் விலங்குகளை காண்பித்து, கணிசமான தொகையை வசூலிக்கின்றனர்.
கடந்த 2013-ம் ஆண்டு சிங்காரா வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆச்சக்கரை பகுதியில் புகைப்படம் எடுக்கச் சென்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கோலின் என்பவரும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மன் நாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவரும் யானை தாக்கி உயிரிழந்தனர். இவர்களை, வனத்துறை அனுமதியில்லாமல், ரிசார்ட் நிர்வாகம் சார்பில் வனப்பகுதிக்குள் அத்துமீறி அழைத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.
தற்போது, வனங்கள் பசுமையாக உள்ளதால், மசினகுடி, மாயாறு, தெப்பக்காடு, தொரப்பள்ளி சாலைகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனத்துறையினர் கண்காணிப்பையும் மீறி, மசினகுடியில் தடையை மீறி சுற்றுலாப் பயணிகளை வனத்துக்குள் அழைத்துச் செல்வது தொடர்கதையாக உள்ளது.
வனத்துக்குள் சென்றால் வனத்துறையினரிடம் சிக்க வாய்ப்புள்ளதால், மசினகுடி-தெப்பக்காடு மற்றும் மசினகுடி-மாயாறு சாலைகளில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று, விலங்குகள் நடமாட்டத்தை காண்பிக்கின்றனர். எவ்வித பாதுகாப்பும் இல்லாத சுற்றுலாப் பயணிகள், வனவிலங்குகளிடம் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: முதுமலை புலிகள் காப்பகம் தொடங்கும் இடத்தில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சவாரி வாகனங்கள் சோதனைச் சாவடியின் மறுபுறம் நிறுத்தி, சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்கின்றனர்.
வனத்துறையினரின் கண்காணிப்பையும் மீறி உள்ளூர் மக்கள் உதவியுடன், வனத்துக்குள் பிற வழிகளில் சுற்றுலா பயணிகள் நுழைகின்றனர். அத்துமீறி நுழையும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிப்பதுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகிறோம், என்றனர்.