
Last Updated:
மத்திய அரசு நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிராகரித்ததை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “நீட் தேர்வு முறை செயல்படுத்தப்பட்ட பின்னர் பயிற்சி பெற முடியாத கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கனவு எட்டாக்கனியாக மாறிவிட்டது. நீட் தேர்வு பயிற்சி வகுப்பு செல்லும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளது.
திமுக ஆட்சி அமைந்த பிறகு, ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலைக்குழு தமிழகத்தில் அனைவரிடமும் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், பரிந்துரைகள் செய்தது. இதையடுத்து அனைத்துக் கட்சிக்கூட்டம் நடத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான சட்டமுன்வடிவை இரண்டாவது முறையாக நிறைவேற்றி, ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
மேலும் பல்வேறு அமைச்சகங்கள் மூலம் அனைத்து விளக்கங்களையும் தமிழக அரசு வழங்கிய பின்னும், தற்போது நீட் தேர்வு விலக்கிற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது” என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மத்திய அரசு கோரிக்கையை நிராகரித்தாலும், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும்” என்றும், இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக வரும் ஏப்ரல் 9ஆம் தேதி மாலை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
April 04, 2025 11:29 AM IST