கொடைக்கானல் மலைப் பகுதியில் நேற்று பெய்த தொடர் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாட் களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்தது.
தொடர்மழை காரணமாக, வெள்ளி நீர்வீழ்ச்சி, எலிவால் அருவி, வட்டக்கானல் நீர் வீழ்ச்சி, தேவதை அருவி, அஞ்சு வீடு அருவி, கரடிச்சோலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப் பரித்து கொட்டுகிறது. தொடர் மழையால் கொடைக்கானலில் இதமான தட்பவெப்பநிலை நிலவுகிறது.
நேற்று பகலில் பனிமூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டுச் சென்றன. தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் விடுதி அறைகளிலேயே முடங்கினர். மலைப் பகுதியில் மழை காரணமாக, பழநியில் உள்ள அணை களுக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது.பழநியிலும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
