கோவை செம்மொழிப்பூங்காவை வரும் 26-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள நிலையில், செம்மொழிப் பூங்காவில் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கோவை, காந்திபுரம் பகுதியில் 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கு, கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பணிக்காக தொடக்கத்தில் ரூ. 167.25 கோடியும், தற்போது கூடுதலாக ரூ. 47 கோடி என என மொத்தம் ரூ 214.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
செம்மொழி பூங்காவில் தொடக்கத்தில், செயற்கை மலைக்குன்றுகள் அமைக்கப்பட்டு, நீர் வீழ்ச்சி விழுவது போலவும், வன விலங்குகள் நடமாடுவது போல சிற்பங்கள் வடிவமைக்கப்படுகின்றன. பார்வையாளர்கள் இதனுள் நுழைந்து செல்லும்போது, புதிய அனுபவத்தை பெற முடியும். பூங்காவின் வெவ்வேறு பகுதிகளில், கடையேழு வள்ளல்களின் சிலைகள் வைக்கப்பட உள்ளன. பூங்காவை வண்ணமயமாக மாற்றும் வகையில் 23 வகையான பூந்தோட்டங்கள், ஆயிரம் வகையான ரோஜாக்கள் இடம் பெற்றுள்ளன.
அதேபோல், தென் அமெரிக்க நாடுகளில் இருந்து, அரிய வகை மரங்கள் தருவிக்கப்பட்டு செம்மொழிப்பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த மரங்கள் சுற்றுச்சுழலை பேணிக் காப்பதுடன், பல வண்ண பூக்கள் இந்த மரங்களில் பூக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும்,செயற்கை நீர் ஊற்றுக்கு அருகே பார்வையாளர்கள் அமர்ந்து ரசிக்கும் வகையில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
பூங்காவின் ஒரு பகுதியில் பலவிதமான கற்றாழைகள் நடப்பட்டுள்ளன. அவற்றின் உச்சியில் மலர்கள் இருப்பதால், கற்றாழைகள் ரம்மியமாக காட்சி அளிக்கின்றன. பூங்காவில் சுற்றுச்சுழலுக்கு உகந்த மூங்கில் தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது.
செம்மொழிப் பூங்காவில், 1,000 பேர் அமரக்கூடிய இருக்கை வசதியுடன் மாநாட்டு மையமும், வாகனங்களை நிறுத்தும் வளாகமும் அமைக்கப் பட்டுள்ளது. அதேபோல், சிறுவர்களுக்கான விளையாட்டுகள், நீண்ட புல் தரை, பொதுமக்கள் அமர்வதற்கு பல்வேறு இடங்களில் இருக்கை வசதியும் செய்யப்பட்டுள்ளது. செம்மொழிப் பூங்காவில் நுழையும் பொதுமக்கள் நுழைவு கட்டணம் செலுத்தி உள்ளே செல்ல வேண்டும். நுழைவுக் கட்டணம் இதுவரை இறுதி செய்யபடவில்லை.

கோவை நகர மக்களின் பொழுதுபோக்கு தளமாக விளங்கவுள்ள செம்மொழிப் பூங்காவை வரும் 26-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார். அதற்கேற்ப பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இதனிடையே நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நேற்று மாலை செம் மொழிப் பூங்கா பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவை செம்மொழிப்பூங்காவில் மொத்தம் 23 பணிகள் முடிந்து விட்டன. டிக்கெட் காம்ப்ளக்ஸ், செயற்கை மலை மற்றும் கட்டணம் செலுத்தி பார்க்கும் பகுதிகள் போன்ற 4 பணிகள் மட்டும் பாக்கி உள்ளது. திறப்பு விழாவிற்கு முன்பாக இப்பணிகள் முடிக்கப்படும். செம்மொழிப் பூங்காவில் வேறு எங்கும் இல்லாத அரிய வகை மரங்கள், 1000 ரோஜாக்கள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம்பெறவுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






