Last Updated:
நாட்டின் 79 ஆவது சுதந்திரத் தினத்தை ஒட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மூவர்ண் தேசிய கொடியை ஏற்றினார்.
மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்தியாவின் 79 ஆவது சுதந்திரத் தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திரத் தின விழாவில், பிரதமர் மோடிக்கு 96 வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். இதனையடுத்து, 22 குண்டுகள் முழங்க, விமானப்படையின் எம்.ஐ.17 விமானம் மூலம் மலர் தூவ, பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். இதனிடையே, சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்ற சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். இதையடுத்து காவல்துறையின் அலங்கார அணிவகுப்பை வாகனத்தில் சென்றபடி முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். இதையடுத்து சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுதந்திர போராட்ட வீரர்களுக்கான குடும்ப ஓய்வூதிய உயர்வு, மலைப்பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் உள்ளிட்ட 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். சுதந்திர நாளில் முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர் கலைஞர் கருணாநிதி என்று தெரிவித்தார். நாடு முழுவதும் அனைத்து மதம், அனைத்து மொழி பேசும் மக்களும் இணைந்து பெற்றுத் தந்ததுதான் இந்த சுதந்திரம் என்றும், தமிழ்நாட்டில் தற்போது உள்ள விடுதலை போராட்ட வீரர்களின் சிலைகள், மணிமண்டபங்கள் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டவை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 22,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், 2வது உலகப் போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவி ரூ.8,000 ஆக உயர்த்தப்படுகிறது என்று தெரிவித்தார். ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்றும், 2ஆம் உலகப்போரில் பங்கேற்றவர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக உயர்த்தப்படுகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும் மலைப்பகுதிகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று கூறினார்.
இதேபோல், தியாகிகளின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கி வரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், சமூகம், பொருளாதாரம் என இரண்டிலும் வளர்ச்சி அடைவதே திராவிட மாடல் வளர்ச்சி எனக் கூறினார். கடந்த 75 ஆண்டுகளில் அதிகாரப் பகிர்வில் மாநில அரசின் பங்கு குறைந்து வருகிறது என்றும், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரம், நிதிப் பகிர்வை சட்டப்பூர்வமாக மீட்டெடுக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார்.
August 15, 2025 10:00 AM IST







