Last Updated:
Madipakkam Selvam murder case : திமுக வட்ட செயலாளர் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கூலிப்படை தலைவன் முருகேசன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி 188வது திமுக வட்ட செயலாளர் மடிப்பாக்கம் செல்வத்தை கூலிப்படை கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இது தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பரங்கிமலை துணை கமிஷனர் பிரதீப் தலைமையில் மடிப்பாக்கம் உதவி கமிஷனர் பிராங் டி ரூபன் உள்பட இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 6 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கூலிப்படை கும்பல் வியாசர்பாடியை சேர்ந்த விக்னேஷ், கிஷோர் குமார், நவீன், சஞ்சய், புவனேஷ்வர் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
விசாரணையில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கூலிப்படை தலைவன் முருகேசன்(30) என்பவர் சொன்னதால் தான் திமுக வட்ட செயலாளர் மடிப்பாக்கம் செல்வத்தை கொலை செய்தோம். இதன் பிண்ணனியில் யார் என்று எங்களுக்கு தெரியாது என தெரிவித்தனர்.
கடந்த ஒரு மாதமாக போலீசார் தேடி வந்த நிலையில் அம்பத்தூர் பகுதியில் தலைமறைவாக இருந்த முருகேசனை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர். மேலும் ரகசிய இடத்தில் வைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
வாக்குமூலமாக முருகேசன் கூறியதாக போலீசார் கூறுகையில், மடிப்பாக்கம் குபேரன் நகர் விரிவு பகுதியில் யாருக்கு சொந்தமானது என தெரியாமல் கேட்பரற்று 4 கிரவுண்ட் நிலம் இருந்தது. இந்த நிலத்தை மதுரை பகுதியில் உள்ள பிரபல ரவுடி முத்து சரவணன், பாபு அண்ணன் ஆகியோர் நிலத்தை எடுக்க முயற்சித்தனர். அப்போது செல்வம் இடைஞ்சலாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரச்சனைக்கு உரிய இடத்தில் செல்லவத்திற்கு தெரிந்த கட்டுமான நிறுவனம் பெயர் பலகை வைத்தது. அப்போது முத்து சரவணன், பாபு அண்ணன் ஆகியோர் இந்த இடத்தை நீ எடுத்து கொண்டு விற்று அதில் தங்களுக்கு தலா ரூ.50 லட்சம் தந்ததால் போதும், மீதமுள்ள ரூ.1 கோடியை நீ எடுத்து கொள் என கூறியதாக கூறப்படுகிறது.
மடிப்பாக்கம் செல்வம்
இதையடுத்து அந்த இடத்திற்கு சென்று அங்கிருந்த பழைய பெயர் பலகையை அகற்றிவிட்டு புதிய பலகையை வைத்தேன். இதற்கு செல்வம் இடைஞ்சல் செய்து கொண்டு இருந்தார். இதனால் இடைஞ்சலாக இருந்த செல்வத்தை கொலை செய்ய திட்டம் தீட்டி இருந்த சமயத்தில் தேர்தல் அறிவித்தனர். சென்னை மாநகராட்சி 188வது வட்டத்தில் நடைபெறவிருந்த தேர்தலில் போட்டியிட மடிப்பாக்கம் செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்க ஏராளமானோர் சால்வை அனிவிப்பது போல் சென்றதை நாங்கள் பயன்படுத்திக் கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவிக்க சால்வை அனிவிப்பது போல் சென்று கொலை செய்தோம் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து முருகேசனை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மதுரை ரவுடி முத்து சரவணனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு வந்த நிலையில் முத்து சரவணனை மடிப்பாக்கம் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர்.
செய்தியாளர் – ப.வினோத்கண்ணன்
April 27, 2022 2:24 PM IST




