
திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை மலைப்பகுதியை சுற்றுலாத் தலமாக்கும் முயற்சியில் சுற்றுலாத் துறை இறங்கியுள்ளது. ஏற்கனவே ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட்ட பல்லுயிர் பூங்கா பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் 5 ஆண்டுகளாக உள்ள நிலையில், மீண்டும் ரூ.10 கோடி செலவில் பல்வேறு சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த முன்னெடுத்துள்ளது பலனிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் நிலையில், திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை மலைகளின் சிற்றரசி என அழைக்கப்படும் வகையில் சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனுமன் இலங்கைக்கு சஞ்சீவி மலையை தூக்கிச் செல்லும் வழியில், அதில் இருந்து ஒரு பகுதி கீழே விழுந்தது. இதுவே சிறுமலை என அழைக்கப்படுவதாக புராணங்களில் கூறப்படுகிறது. இதனால் மூலிகைகள் நிறைந்த மலையாக சிறுமலை காணப்படுகிறது.
சிறுமலையில் காட்டுமாடுகள், கடமான், குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்து நீண்ட வனப்பகுதியாக உள்ளது. திண்டுக்கல் அருகே தொடங்கி மாவட்ட எல்லையான வாடிப்பட்டி வரை சிறுமலை நீண்டுள்ளது. இன்னமும் பழங்குடியினர் தங்கள் பழமை மாறாமல் சிறுமலை வனப்பகுதியில் வசித்து வருகின்றனர். இங்கு காபி, மிளகு, சவ்சவ் உள்ளிட்ட மலை விவசாயமும் நடைபெற்று வருகிறது. இதனால் இயற்கை எழில் மாறாமல் உள்ள சிறுமலையை சுற்றுலாத்தலமாக்கினால் செயற்கைத்தன்மையுடன் மாறிவிடும் என்ற அச்சமும் இயற்கை, வன அலுவலர்களிடம் உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் ஆட்சியராக டி.ஜி.வினய் இருந்தபோது, சிறுமலையை சுற்றுலாத்தமாக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டு சிறுமலை பகுதியில் சுற்றுலாத் துறையினருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கு வாட்சிங் டவர் அமைப்பது, குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்கா அமைப்பது, அங்குள்ள சிறிய குளத்தில் படகுசவாரிக்கு ஏற்பாடு செய்வது என பரிசீலிக்கப்பட்டது.
இதற்கிடையில் வனத்துறை சார்பில் கடந்த ஆட்சியில் சிறுமலையில் ரூ.5 கோடி செலவில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட்டது. சிறுமலைக்கு செல்பவர்கள் இந்த பூங்காவை பார்த்துவிட்டு செல்லாம் என ஆர்வமுடன் அங்கு சென்றால், பணிகள் முடிந்து 5 ஆண்டுகளாகியும் மக்கள் பார்வைக்கு திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இப்பூங்காவில் பட்டாம்பூச்சி பூங்கா, வனவிலங்குகள் குறித்த அரிய தகவல்கள் அடங்கிய கண்காட்சி அரங்கம் உள்ளிட்டவை சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதை பராமரிக்க பணியாட்கள் இல்லாததால் இந்த பல்லுயிர் பூங்கா திறக்கப்படாமல் இருப்பதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். சிறுமலை சுற்றுலாவின் முகமாக பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட்டும் திறக்கப்படாமல் வீணாக உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் சிறுமலை யை சுற்றுலாத் தலமாக்கும் முயற்சி மீண்டும் தொடங்கி சுற்றுலாத் துறை சார்பில் அதன் அரசு செயலர் மணிவாசன் ஆய்வு மேற்கொண்டார். ரூ.10 கோடி மதிப்பீட்டில் சுற்றுலாப் பணிகள் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
சிறுமலை கிராமத்தை சுற்றி சில மலை கிராமங்கள் உள்ளன. பட்டு வளர்ச்சித் துறை, தோட்டக்கலைத் துறை என அரசுக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. இவற்றில் பூங்கா அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். இங்குள்ள சாலைகள் குறுகியதாக உள்ளதால் அதிக வாகனங்கள் சிறுமலைக்கு செல்லும்பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தேவையான போக்குவரத்துக் கட்டமைப்புகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே ரூ.5 கோடி செலவழித்து பல்லுயிர் பூங்கா அமைத்து திறக்காமல் விட்டதை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் பின்னரே படிப்படியாக சுற்றுலாப் பயணிகளை கவரும் திட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்த வேண்டும் என்பதே சிறுமலை மலைகிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.