
Last Updated:
தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடர்ந்தது. வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதி கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
த.வெ.க கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதிக்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் சென்னை முதல் உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை யானை சின்னத்தை பயன்படுத்த தவெக கட்சிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி பி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது தவெக சார்பில் மூத்த வழக்கறிஞர், விஜய் நாராயண் நேரில் ஆஜராகி வாதிட்டார். பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் வழக்கறிஞர் பி.ஆனந்தன் காணொலி காட்சி மூலமாக ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்.
அப்போது, தவெக தரப்பில் வாதங்கள் நிறைவடைந்திருந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் முழுமையான வாதங்கள் வைக்கப்படாத நிலையில் வழக்கில் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, தங்கள் தரப்பில் மேற்கொண்டு வாதங்கள் முன்வைக்க அனுமதிக்கக்கோரியும், வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதிக்கக்கோரியும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் இன்று புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
July 02, 2025 6:02 PM IST
[]
Source link