
ராமேசுவரம்: தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றமாகக் காணப்படுவதால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வேண்டாம் என்று போலீஸார் தடை விதித்துள்ளனர்.
மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி, வங்காள விரிகுடா கடற்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரையிலும் அதிகபட்சமாக 65 கி.மீ வரை வீசக்கூடும் என்பதால் இரண்டாவது நாளாக இன்று (மே 27) ராமேசுவரம் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
மேலும் தனுஷ்கோடி, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றமாகக் காணப்பட்டதுடன், பலத்த காற்றும் வீசியது. கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்றினால் தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை ஆகிய பகுதிகளில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.