
Last Updated:
ஜெயிலுக்கு சென்று திரும்பியவரின் பேத்தியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட உதவி ஜெயிலருக்கு சிறுமியின் சித்தி தர்மடி.
தன் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலரை அந்தச் சிறுமியின் சித்தி, பொதுவெளியில் வைத்து தர்மடி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
மதுரை மத்திய சிறையில் சிறைவாசம் அனுபவித்தவர் விடுதலையாகி, பின் மதுரை பைபாஸ் சாலையில் சிறு உணவகம் ஒன்றை நடத்திவருகிறார். அந்த உணவக உரிமையாளருக்கு இரு மகள் இருக்கின்றனர். அவர்கள் இருவருக்கும் திருமணமாகி அவர்களுக்கும் பெண் குழந்தைகள் உள்ளனர். சிறுமிகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இணைந்தே அந்த உணவகத்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த உணவகத்தில், மதுரை மத்திய சிறையின் உதவி ஜெயிலர் பாலகுருசாமி வழக்கமாக உணவருந்தி வந்திருக்கிறார். சமீப நாட்களாக உதவி ஜெயிலர் பாலகுருசாமி, அந்த சிறுமிகளிடம் பேசி வந்திருக்கிறார். பிறகு தனது மொபைல் எண்ணை கொடுத்து, எந்த உதவியானாலும், தன்னை அழைக்குமாறு கூறியுள்ளார். அப்படி மொபைல் எண்ணை கொடுத்த பாலகுருசாமி, அந்த சிறுமியை அவ்வப்போது தொலைபேசியில் அழைத்துப் பேசிவந்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு, அந்த சிறுமியை தொலைபேசியில் அழைத்து பாலகுருசாமி, தன்னைச் சந்திக்க தனியாக ஒரு இடத்திற்கு வரும்படி கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி, இந்த விவகாரத்தை அவரது வீட்டில் கூறியுள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த அவரது குடும்பத்தினர். சிறுமியை அழைத்துக்கொண்டு பாலகுருசாமி சொன்ன இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு ஏடிஎம்-ல் பணம் எடுத்துவிட்டு திரும்பிய பாலகுருசாமியை சிறுமியின் குடும்பத்தினர் சுற்றிவளைத்துள்ளனர்.
அப்போது ஆத்திரம் அடைந்த அந்த சிறுமியின் சித்தி, பாலகுருசாமியின் சட்டை பிடித்து அவரை சரமாரியாக அடித்தார். இதனைக் கண்டதும், அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும், அந்த காட்சியை ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோவில், உதவி ஜெயிலர் பாலகுருசாமியை அடித்து உதைக்கும் அந்த சிறுமியின் சித்தி, “போலீஸ்னா பெரிய இவன் நினைப்பா..” என சொல்லி தாக்குகிறார். அப்போது அங்கிருந்தவர்கள் அந்த இளம் பெண்ணை தடுக்கிறார்கள். அப்போது அந்த பெண், “ஜெயிலுக்கு போனவர்கள் எல்லாம் அவன் வீட்டுக்கு போகணும்னு அவசியம் இல்லை. முதல்ல என்னைய கூப்பிட்டான்; இப்ப என் பிள்ளையை கூப்பிட்டுட்டு இருக்கான்” என சொல்லி இறுதியில் அந்த உதவி ஜெயிலரை தன் காலணியால் தாக்குகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இதனைத் தொடர்ந்து உதவி ஜெயிலர் பாலகுருசாமி மற்றும் தாக்கிய இளம்பெண் மற்றும் அவரது மகள் ஆகியோரிடம் மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமியை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஐஜி பழனி உத்தரவிட்டுள்ளார்.
December 22, 2024 6:16 PM IST
ஜெயிலுக்கு சென்றுவந்தவரின் பேத்தியிடம் பாலியல் அத்துமீறல்.. உதவி ஜெயிலருக்கு தர்மடி கொடுத்த இளம் பெண்
[]
Source link