
தனது 27 வயது வரை சி-மேஜர், டி-மேஜர் என்றால் என்னவென்றே தெரியாது எனக் கூறியுள்ள இசை அமைப்பாளர் இளையராஜா, ராகம், தாளம், பல்லவி போன்று சிம்பொனிக்கும் விதிகள் உண்டு என தெரிவித்துள்ளார். கடந்த 8ஆம் தேதி, லண்டனில் “வேலியண்ட்” என்ற தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார் இளையராஜா. சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்பதை இசை ரசிகர்கள் கொண்டாட, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என பலரும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.
இந்நிலையில், சிம்பொனி குறித்த பல்வேறு தகவல்களை, சிம்பொனிக்கு பிறகு நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த தனது முதல் நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார் இளையராஜா. நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் கார்த்திகைசெல்வன் நடத்திய நேர்காணலில், சிம்பொனி எழுதுவது வெண்பா எழுதுவது போன்று கடினமானது என இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இசையில் உள்ள ராகம், தாளம் போன்று சிம்பொனிக்கென்று விதிகள் உள்ளது என்றும், விதிகளுக்கு உட்படாதவை சிம்பொனி வகையில் சேராது எனவும் கூறினார். சிம்பொனியை அரங்கேற்ற பிலஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவை அணுகிய போது, முதலில் இசைக் குறிப்புகளை அனுப்ப தயங்கியதாகவும், ஆனால், அனுப்பிய குறிப்புகளை பார்த்துவிட்டு beyond perfection என அவர்கள் பாராட்டியதாகவும் பெருமையுடன் கூறினார்.
WATCH : https://t.co/Qu81lioKGs
Disco With KS | “இன்றும் என் காலில் தான் நிற்கிறேன் “ – 27 வயதில் C Major to Beyond Perfection வரை – Ilayaraja Hyper Exclusive Interview | இளையராஜாவுடன் 100 நிமிடங்கள் #DiscoWithKS #Ilayaraja #IlayarajaInterview #Symphony #MusicMaestro… pic.twitter.com/DLERLAoF5S— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 30, 2025
ஜனனி ஜனனி பாடல் ரெக்கார்டிங்கின் போது நடந்நத நெகிழச்சியான தருணத்தை பகிர்ந்தார். முதலில் ஜேசுதாஸ் பாடுவதாக இருந்த பாடல் தான் ஜனனி ஜனனி. ரெக்கார்டிங் தொடங்கிய நிலையில், அவர் ஊரில் இல்லாத சூழல் ஏற்பட்டது. இதனால் இயக்குனர் என்னை பாட சொன்னார். நானும் அவர் பெரிய இயக்குனர் என்று மறுக்காமல் பாடல் பாட ஒப்பு கொண்டேன். பாட்டு பாடி கொண்டிருக்கும் போதே இசைக்குழு, புரொடக்ஷன் என அனைவரும் கண்கலங்கிவிட்டனர்.
மேலும், தனது இசையை பீத்தோவன் இசை வகைமைக்கு முன்பான கிளாசிக்கல் வகைமையோடு ஒப்பிட்டதையும் நினைவுகூர்ந்தார். சாதாரண கிராமத்தில் இருந்து வந்த தன்னை சிம்பொனியே அடையாளப்படுத்தியதாக தெரிவித்த இளையராஜா, தமது 27 வயதில் தான் தமக்கு எந்தெந்த ஒலி எந்தெந்த சுரம் என்பதே தெரியும் என்றும், ஆனால் மேற்கத்திய நாடுகளில் அது குழந்தை பருவத்தில் இருந்தே அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு அவற்றை கண்டுகொள்வதே இல்லை என பதிலளித்த இளையராஜா, இசையை கற்றுக்கொள்ளவில்லை என்ற ஏக்கம் தற்போதும் உள்ளதாகவும், இன்னும் கற்றுக்கொண்டு வருவதாகவும் வெள்ளந்தியாக கூறியுள்ளார்.
March 30, 2025 11:41 AM IST
[]
Source link