
Last Updated:
திருடிய விலை உயர்ந்த சைக்கிளில் இரண்டு சைக்கிள்களை, சைக்கிளிங் செல்வதற்காக எடுத்துவைத்துக் கொண்டு மற்ற சைக்கிள்களை விற்பனை செய்தது விசாரணையில் அம்பலம்.
விருகம்பாக்கம், சிவசங்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்(48). சினிமா துறையில் கேமராக்களுக்கு லென்ஸ் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் பயன்படுத்தி வந்த விலை உயர்ந்த சைக்கிள் வீட்டின் அருகே சில தினங்களுக்கு முன் நிறுத்தி வைத்திருந்தார்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் திருடு போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதே போல விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தனது மகனின் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் திருடு போயிருப்பதாகவும் அதனை மீட்டுத் தருமாறும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
கடந்த பத்து நாட்களில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சைக்கிள் திருடு போனதாக நான்கு புகார்கள் குவிந்தன. இதனையடுத்து விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அனைத்து இடங்களிலும் திருடியது ஒரே நபர்கள் தான் என்பது தெரியவந்தது.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விருகம்பாக்கத்தை சேர்ந்த மதன்(எ) மதன் குமார்(19) மற்றும் அவரது நண்பர் தேனி காந்த் ஆகிய இருவரும் என தெரிய வந்தது. இதனையடுத்து விருகம்பாக்கம் போலீசார் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மதன் மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.ஏ தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்பதும் அவரது நண்பர் தேனிகாந்த் பல்லாவரம் வேல்ஸ் யுனிவர்சிட்டியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.
கல்லூரி மாணவர்களான இவர்கள் தங்களின் செலவிற்காக விருகம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி சென்று அதனை குறைந்த விலைக்கு விற்று ஜாலியாக இருந்து வந்ததும் தெரிய வந்தது.
விருகம்பாக்கம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 25க்கும் மேற்பட்ட உயர்ரக சைக்கிள்களை இவர்கள் இருவரும் இணைந்து திருடியதும் அவற்றுள் சைக்கிளிங் செல்வதற்காக தங்களுக்கு என இரண்டு விலை உயர்ந்த சைக்கிள்களை வைத்துக் கொண்டு மற்ற சைக்கிள்களை விற்று உல்லாசமாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு கல்லூரி மாணவர்களிடமிருந்தும் 5 விலை உயர்ந்த சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Chennai,Chennai,Tamil Nadu
August 26, 2022 8:15 PM IST