
Last Updated:
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை நகரில் எந்தெந்த சாலைகள் பயணிக்க தக்க வகையில் உள்ளது என பெருநகர காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் கடந்த 45 மணி நேரத்தில் 47 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், பெரும்பாலான சாலைகளில் வெள்ள நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்து நிற்கிறது. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மழைநீர் சூழ்ந்துள்ள சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில் சென்னை நகரில் எந்தெந்த சாலைகள் பயணிக்க தக்க வகையில் உள்ளது என பெருநகர காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விமான நிலையத்தில் இருந்து அண்ணா சாலை வரையும், கிழக்கு கடற்கரை சாலையும் தடையற்ற போக்குவரத்து சாலையாக பராமரிக்கப்படுகிறது. மற்ற இடங்களில் ஒரு அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அவசர தேவைக்காக மக்கள் அண்ணா சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் புழல் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால், மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், மழைநீர் தேங்கியுள்ளதால் பல்வேறு சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளன. முக்கியமாக தியாகராய நகரில் உள்ள துரைசாமி சுரங்கபாதை, மேட்லி சுரங்கபாதை, கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளன. கணேசபுரம், கெங்குரெட்டி, செம்பியம், வில்லிவாக்கம், மவுண்ட் – தில்லைநகர் சுரங்கபாதைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சைதாபேட்டை அரங்நாதபுரம் , சைதாபேட்டை, பழவந்தாங்கல், சிபி. சாலை, வியாசர்பாடி, திருவொற்றியூர் மாணிக்கம் நகர் சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளன. கோயம்பேடு புதுபாலம், சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடு, சூளைமேடு சுரங்கபாதைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
Chennai,Chennai,Tamil Nadu
December 05, 2023 10:39 AM IST