
ஊட்டி: நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக, சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஊட்டி – குன்னூர் மற்றும் ஊட்டி – கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் சேவை வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை மூன்று நாட்கள் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குன்னூர் முதல் ஊட்டி வரையில் 15, 16 மற்றும் 17-ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
ஐந்து பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ள இந்த சிறப்பு மலை ரயிலில், மொத்தம் உள்ள 210 இருக்கைகளில் 80 இருக்கைகள் முதல் வகுப்பும், 130 இருக்கைகள் இரண்டாம் வகுப்பில் இருக்கும். குன்னூரில் இருந்து காலை 8.20 புறப்படும் ரயில், 9.40 மணிக்கு ஊட்டி வந்தடையும். மாலை 4.45 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்படும் ரயில், மாலை 5.55 மணிக்கு மீண்டும் குன்னூர் சென்றடையும்.
இதேபோல், ஊட்டி முதல் கேத்தி வரையிலான சிறப்பு ரயில் 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் ஊட்டி ரயில் நிலையத்தில் இருந்து 3 முறை கேத்திக்கு இயக்கப்படவுள்ளது. காலை 9.45, 11.30 மற்றும் மதியம் 3 ஆகிய நேரங்களில் கேத்திக்கு இயக்கப்படவுள்ளது.” என்று அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.